tamilnadu

img

ஊரடங்கில் தளர்வு கொண்டாட்டத்திற்கு அல்ல

திருவனந்தபுரம்:
ஊரடங்கில் தளர்வு கொண்டாட்டத்திற்கல்ல, கோவிட் தடுப்பு ஏற்பாடுகளை பெரிய அளவில் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதற்கான அறிவிப்பாக அதுஉள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரத்தில் கோவிட் குறித்தஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் மேலும் கூறியதாவது:

இன்று உள்ளதைவிட அதிகம் நபர்கள்கேரளத்திற்கு வருவார்கள். ஒரு கேரளியருக்கும் நமது வாசல் மூடப்படாது. நோய்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் திகைத்து நிற்க வேண்டியதில்லை. அனைவருக்கும் துல்லியமான பரிசோதனையும், சிகிச்சையும், தங்கும் வசதியும்செய்து தரப்படும்.கேரளத்திற்கு வருகிறவர்களில் அவசரநிலையில் உள்ள நோயாளிகள் இருக்கலாம். அதிக நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டியது வரலாம். அதையெல்லாம் சாத்தியமாக்கும் வகையில் வெண்டிலேட்டர் வசதி தயார் நிலையில்உள்ளது. அத்தகைய தலையீடுகளுக்கே இனிவரும் நாட்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊரடங்கில் தளர்வு அளித்திருப்பது, வாழ்க்கையை முன் நகர்த்துவதற்காக. அதல்லாத கொண்டாட்டங்களுக்காக அல்ல.பொதுப் போக்குவரத்து பகுதியளவில் துவக்கப்பட்ட உடன் பல இடங்களிலும் நெரிசல் காணப்படுகிறது. குழந்தைகளையும் வயதானவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார்கள்.தனிமைக்கு திரும்பச் சொல்வது முதியோருக்கும் குழந்தைகளுக்கும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான். இதை புரிந்துகொண்டு அவர்களைவீடுகளில் இருக்கச் செய்ய வேண்டும்.இவையெல்லாம் சுயமாக செய்ய வேண்டியவையாகும். மறந்துவிடும்போதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டியதாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.    

ஒரே நாளில் 42 பேருக்கு கோவிட்
 கேரளத்தில் வெள்ளியன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 42 பேருக்கு கோவிட் கண்டறியப்பட்டது. கண்ணூர் 12, காசர்கோடு 7, பாலக்காடு, கோழிக்கோடு தலா 5, திரிச்சூர், மலப்புறம் தலா 4, கோட்டயம் 2, கொல்லம், பத்தனம்திட்டா, வயநாடு தலா 1 என மாவட்ட அளவில் கோவிட் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 21 நபர்கள் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள், ஆந்திரா, தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களில் தலா ஒருவருக்கும் நோய் உள்ளது. 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். கண்ணூரில் ஒருவருக்கு தொடர்பு மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் சுகாதார ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைபெற்று வந்த இருவர் குணமடைந்தனர். மாநில அளவில் இதுவரை நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 732. தற்போது 216 பேர் சிகிச்சையில் உள்ளனர்.84,258 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில்83,649 பேர் வீடுகளிலும் 609 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். வெள்ளியன்று 162பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 51,310 மாதிரிகள் ஆய்வுக்குஅனுப்பப்பட்டதாகவும் முதல்வர் கூறினார்.

;