tamilnadu

கேரளத்தின் ஒரு மாத கால கோவிட் பாதிப்பில் 88 சதவிகிதம் வெளியில் இருந்து வந்தவர்கள்

திருவனந்தபுரம், ஜுன் 9-     கேரளத்தில் கடந்த ஒரு மாதத்தில் கண்டறியப்பட்ட கோவிட் நோயாளிகளில் 88 சதவீதம் பேர் வெளி நாடுகள், பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களாவர். மே 9 முதல் ஜூன் 7 வரை 1412 பேருக்கு கோவிட்-19 நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 644 பேர் (45.6 சதவீதம்) வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 600 பேர் (42.4 சதவீதம்) பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களது தொடர்பால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலும் பிற மாநிலங்களிலும் சிறந்த சிகிச்சை இல்லாததால் அச்சம் அடைந்துள்ள நோயாளிகளும் கேரளாவுக்கு வருகிறார்கள். சிறந்த சிகிச்சையும் அரசாங்கத்தின் பாதுகாப்பும் அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப உதவுகிறது. அவர்களில் பெரும்பாலோர் வந்த பிறகு இங்கு நடத்தப்படும் பரிசோதனையில் நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. மே 7 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு விமானங்கள் வரத் தொடங்கின.  அதில் வந்தவர்களில் முதலாவது நோய் தொற்று மே 9 இல் உறுதி செய்யப்பட்டது. மலப்புறம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு முதலில் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மூன்று பேரிடம் மே 10 ஆம் தேதியும் 11 ஆம் தேதி ஒருவரிடமும் நோய் தொற்று உறுதியானது.

அடுத்தடுத்த நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஜூன் 5 ஆம் தேதி மட்டும் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த 50 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டது. ஆறாம் தேதி 64 பேருக்கும் ஏழாம் தேதி 71 பேருக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பியவர்கள். குவைத், சவுதி அரேபியா, கத்தார், தஜிகிஸ்தான், ஓமான் ஆகிய நாடுகளில் இருந்த வந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து வந்த மொத்தம் 616 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இத்தாலி, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களிடமும் கோவிட் தொற்று உள்ளது.  மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் கோவிட் உறுதி செய்யப்பட்டது பெரும்பாலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு, தில்லி, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அடுத்தடுத்த எண்ணிக்கையில் உள்ளனர். இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 591 பேர் நோய்வாய்ப்பட்டனர். மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

;