tamilnadu

img

கேரளத்தில் புதிதாக ‘சமூக காவல் இயக்குநரகம்’ நிலம்பூரில் ஆறாவது போலீஸ் பட்டாலியன்: முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஐ.ஜி நிலையில் உள்ள இயக்குநரின் தலைமையில் காவல்துறையில் சமூக காவல் (Social Policing) இயக்குநரகம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சமூக காவல்பிரிவு செயல்பாட்டுக்கு வரும். தற்போதுள்ளகுற்றவியல் மற்றும் சட்டம்ஒழுங்கு அமலாக்கப் பிரிவினருடன் கூடுதலாக இந்த பிரிவு செயல்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். 

புதிதாக கட்டப்பட்ட வர்கலா மற்றும் பொன்முடி காவல் நிலைய கட்டிடங்கள் மற்றும் கொல்லம் ஊரக கட்டளை மையத்தையும் ஆன்லைனில் புதனன்றுமுதல்வர் திறந்து வைத்தார். அப்போதுஅவர் மேலும் கூறியதாவது: கேரளத்தில்ஆறாவது போலீஸ் பட்டாலியன் விரைவில் நிலம்பூரில் அமைக்கப்படும். அதன்தலைமையகம் கோழிக்கோடுக்கு மாற்றப்படும். முதல் கட்டத்தில், புதிய பட்டாலியனில் 100 பேர் சேர்க்கப்படுவார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக செயல்படும்போது, ​​பட்டாலியனில் 1000 பேர் இருப்பார்கள். அதில் பாதி பெண்களாக இருப்பார்கள். மாநிலத்தில் காவல்துறையை திறம்பட செயல்படுத்த 25 புதிய காவல் துணைப்பிரிவுகள் டி.எஸ்.பி-களின் தலைமையில் உருவாக்கப்படும்.

தற்போது 60 துணைப்பிரிவுகள் உள்ளன. திருவனந்தபுரம் புறநகர், கொல்லம்புறநகர், எர்ணாகுளம் புறநகர், வயநாடுமற்றும் கோழிக்கோடு புறநகர் மாவட்டங்களில் புதிய பெண்கள் காவல் நிலையங்கள்அமைக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தின் 19 காவல் மாவட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் செயல்படும். தற்போது, ​​14 காவல் மாவட்டங்களில் மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. மாநிலத்தின் 15 காவல் மாவட்டங்களில் உள்ள சைபர் செல்கள் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களாக மாற்றப்படும். தற்போது திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய நகரங்களில் சைபர் காவல் நிலையங்கள் உள்ளன. இதன் மூலம், 19 காவல் மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல் பாட்டுக்கு வரும்.

சேவை வழங்கும் மையங்கள்
கண்ணூர் காவல் மாவட்டத்தைப் பிரித்து கண்ணூர் நகரம், கண்ணூர் ஊரக காவல் மாவட்டங்கள் அமைக்கப்படும். அனைத்துகாவல் நிலையங்களையும் சேவை வழங்கும் மையங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார். நவீன வசதிகள் கொண்ட வர்க்கலா பொன்முடி காவல்நிலைய கட்டடங்களை ஆன்லைனில் முதல்வர் திறந்து வைத்தார். பிரபல புனித யாத்திரை மையமான சிவகிரி மடமும் சுற்றுலா மையமான வர்க்கலா பாபசநாசம் கடற்கரை வரை அதிகார எல்லைகளாக கொண்ட வர்க்கலா காவல் நிலையம் 1922 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 7200 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு காவல்நிலைய கட்டடங்களுக்கான மதிப்பீடு ரூ.2.80 கோடியாகும். குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான தாக இரண்டு கட்டடங்களும் கேரளிய மாதிரியில் கட்டப்பட்டுள்ளன. 

கொல்லம் ஊரக காவல் மாவட்டம் 2011 இல் அமைக்கப்பட்ட பின்னர், குறைந்த வசதிகளுடன் கூடிய கட்டிடங்களில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது. 2019-20ஆம் ஆண்டிற்கான மாநில திட்டசெலவினத்தின் ஒரு பகுதியாக கொட்டாரக்கராவில் கொல்லம் ஊரக மாவட்ட காவல்துறைக்கான கட்டுப்பாட்டு அறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை கட்ட ஐஷா போத்தி எம்.எல்.ஏ  தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் காவல் நவீனமாக்கலுக்கான மத்திய நிதி ஆகியவை பயன்படுத்தப் பட்டன.ஆன்லைன் நிகழ்ச்சியில் மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா வரவேற்றார். சட்டம் ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி டாக்டர் ஷேக் தர்வேஷ் சாஹிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வர்க்கலா, பொன்முடி, கொட்டாரக்கராவில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பிற மக்கள் பிரதிநிதிகள் மற்றும்காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட னர். கோவிட் பாதுகாப்பு நெறிமுறைக்கு இணங்க விழாக்கள் நடத்தப்பட்டன.

;