tamilnadu

img

குடியரசு தின விழாவில் கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு

குடியரசு தின விழாவில் கேரளா மாநிலத்தின் அலங்கார ஊர்தி, பேரணியில் பங்கேற்பதற்கான கோரிக்கை தொடர்ந்து 2வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.  

குடியரசு தினக் கொண்டாட்டம் வரும் ஜனவரி 26-ஆம் தேதியன்று தலைநகர் தில்லியில் நடைபெறும். அப்போது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும். மாநில அரசுகளின் அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு, மையக் கருத்து, கரு, அதன் காட்சித் தாக்கம் உள்ளிட்டவற்றை நிபுணர்கள் அடங்கிய ஆய்வுக் கமிட்டி ஆய்வு செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். பின் அதிலிருந்து குடியரசு தினப் பேரணியில் இடம் பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்திப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த ஆண்டு குடியரசு தின விழா பேரணியில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது தொடர்பாக 32 மாநிலங்கள் மற்றும் யூனியன், 24 அமைச்சகங்களில் இருந்து மொத்தம் 56 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 22 விண்ணப்பங்கள் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளன.  இதில் கேரள, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய  மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. 

அதிலும் கேரளாவின் அலங்கார ஊர்தி தொடர்ந்து 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்தியில், தேயம் மற்றும் காலமண்டலாவின் பாரம்பரியத்தை குறிக்கும் கலை மற்றும் கட்டிடக்கலை வடிவங்களையும், கேரள நீர்நிலைகள், கதகளி மற்றும் மோகினி ஆட்டம் நடனக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய செண்டாவின் வாத்திய கருவியாக வாசிப்பு ஆகியவை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே மாநிலம் கேரளா. அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் இச்சட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் கேரளாவின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது, அரசியல் நோக்கம் கொண்டது என்று கேரளா சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன் கூறினார். 

;