tamilnadu

img

கேரளத்தில் கோவிட் டெஸ்ட்டுகள் அதிகம்.... தற்போது சமூக பரவல் இல்லை: கே.கே.சைலஜா

திருவனந்தபுரம்:
கோவிட் டெஸ்ட்டுக்கான விதிமுறைகளின்படி கேரளத்தில் அதிகம் டெஸ்ட்டுகள் நடத்தப்படுகின்றன. தற்போது கோவிட் 19 சமூகப் பரவல் இல்லை. ஆனால் நாளை அது நிகழலாம் என்பதை நிராகரிக்கமுடியாது. சமூக பரவலைத் தடுக்க அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. தொடர்பு மூலம் நோய் பரவல் மிகவும் குறைவு என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறினார். 

திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது: சமூகப் பரவலை ஆய்வு செய்ய கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.   சமூக பரவலை சரிபார்க்க கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதோடு, நிமோனியா அதிகம் உள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். வெள்ளியன்று கோவிட்டால்இறந்த திருவல்லாவில் வசித்துவந்த ஜோஷி, கடந்த மே 18 முதல் சிகிச்சையில் இருந்து வந்தார். அவர் துபாயில் இருந்து கடந்த 11 ஆம் தேதி திரும்பி வந்தவர். அவருக்கு கடுமையான நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தியமான சிகிச்சைகள் அளித்தபோதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. 

முதலில், இத்தாலியிலிருந்து கோவிட்நோய் பாதிப்பு உள்ளவர் இங்கு வந்தபோது, ​​இந்த நோய் அங்கு அவ்வளவு பரவலாக இல்லை. அன்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வளைகுடா உட்பட நோய் பரவுதல் அதிகமாக உள்ளது. மே 7 முதல் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து எந்த கவலையும் இல்லை. கோவிட் நோயாளிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து இலவச சிகிச்சையை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

கேரளத்தில் 65 மடங்கு டெஸ்ட்
கேரளத்தில் துவக்கத்தில் கோவிட் டெஸ்ட் குறைவான அளவில் நடந்தது. தற்போது தினமும் 3000 டெஸ்ட்டுகள் நடத்தப்படுகின்றன. டெஸ்ட் குறைவாக நடப்பதாக கூறுவோர் அதற்கான அளவுகோல் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். பத்து லட்சம் மக்களில் எத்தனை நோயாளிகள் கண்டறியப்படுகிறார்களோ அதன் நூறு மடங்கு வரை டெஸ்ட் அதிகரிக்கப்பட வேண்டும். கேரளத்தில் 65 மடங்கு டெஸ்ட் நடத்தப்படுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இது 20 மடங்காக மட்டுமே உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

;