tamilnadu

img

மாநாடு வெற்றிபெற கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துச் செய்தி

மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் மாநாடு வெற்றிபெற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள செய்தி வருமாறு: சென்னையில் பிப்ரவரி 26 அன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கு கொள்ள பெரிதும் ஆவலோடு இருந்தேன். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவர் தந்த ஆலோசனையின்படி என்னால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி என்பவை இந்திய அரசியல்சாசன உணர்வுக்கு முரணாக குடியுரிமை விசயத்தில் ஒருபுறம் மத அம்சத்தைப் புகுத்துகிறது என்றால், மறுபுறம் தேவையே இல்லாமல் அனைத்து மக்களையும் தம் குடியுரிமையை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தைத் தருகிறது. அதனால்தான் சிஏஏ-யை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம், என்பிஆர் பணிகளையும் நிறுத்தி வைத்திருக்கிறோம். 

ஆனால் மத்திய அரசு இவற்றை அமுல்படுத்துவதில் மிகப்பிடிவாதமாக உள்ளது. மக்களின் எதிர்ப்பு உணர்வுக்கு  மதிப்பளிப்பதாகவும் தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, தில்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்கள் சிஏஏ எதிர்ப்பாளர்களைத் தாக்கும்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையும் உள்ளது. அதனால் பல பேர் மாண்டு போன, பல நூறு பேர் காயம் பட்ட துயரமான செய்தி வந்துள்ளது.  நமது நாட்டின் பாரம்பரியமான மதப்பன்மைத் தன்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் பெரும் ஆபத்து வந்துள்ளது. அதை எதிர்கொள்ள மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் கட்டிக்காப்பது அவசியம் என்று நினைக்கிறேன். இந்த மாநாடு அதற்கும், மக்களின் குடியுரிமையைப் பாதுகாப்பதற்கும் நல்லதொரு பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன். மாநாடு வெற்றி பெற எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

;