tamilnadu

img

நிருபரைத் தாக்கிய எஸ்.எஸ்.ஐ.   பணியிட மாற்றம்: டியூஜே வரவேற்பு


பேரணாம்பேட், ஏப்.11-
கிருஷ்ணகிரியில் சத்தியம் தொலைக்காட்சி.நிருபர் பாஸ்கர் தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி. மற்றும் பத்திரிகையாளர்களுக்கு டி.யூ.ஜே. நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி முன்னாள் அமைச்சரும் மாநிலங் களவை  உறுப்பினருமான கே.பி.முனுசாமி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குச் செய்தி சேகரித்துவிட்டுத் திரும்பிய சத்தியம் தொலைக்காட்சி நிருபர் பாஸ்கர் அன்று மாலை 4:30 மணிக்குக் கிருஷ்ணகிரி 5 ரோடு வழியாக வந்துள்ளார். அங்கு 144- தடை உத்தரவை கடைப்பிடிக்காமல் கூட்டமாக இருந்தது தெரியவந்தது. மேலும் காவல்துறை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போக்குவரத்தைச் சரி செய்ய முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனை சத்தியம் தொலைக்காட்சி நிருபர் பாஸ்கர் செய்தி சேகரித்தார்.
இதனைப் பார்த்த காவல் துறை எஸ்.எஸ்.ஐ. பாஸ்கர், சத்தியம் தொலைக்காட்சி செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமல்  கடுமையாக அடித்துள்ளார். அவரிடம் இருந்து நிறுவன அடையாள அட்டை, கேமிரா ஆகிய வற்றை பிடுங்கிக்கொண்டார். தாக்குதலுக்குள்ளான  சத்தியம் தொலைக்காட்சி நிருபர் பாஸ்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் ஆகியோரை செல்பேசியில் தொடர்பு கொண்டு, சம்மந்தப்பட்ட  எஸ்எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இருவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி.குமார், ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் கிருஷ்ணகிரி பிரஸ் கிளப் தலைவர் ரமேஷ், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர்  முன்னிலையில் சம்பந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பாஸ்கர் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஓசூர்-கர்நாடக எல்லை பாதுகாப்புப் பணிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இப்பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர் , காவல் கண்காணிப்பாளர்  மற்றும் கிருஷ்ணகிரி பத்திரிகையாளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க  மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பி.எஸ்.டி. புருஷோத்தமன் தெரிவித்திருக்கிறார்.

;