ஐபிஎல் தொடருக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்கு
உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. சொந்த மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் மூலம் இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தைத் துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் கொரோனா எளிதாகப் பரவிவிடும் என்பதால் ஐபிஎல் தொடரை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அச்சம் கொள்கின்றன. ஆனால் கிரிக்கெட் வாரியமோ திட்டமிட்டபடி நடக்கும் என வாய்மொழியில் உத்தரவிட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரை ரத்து செய்யக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் தலைமையில் வியாழனன்று விசாரணைக்கு வர உள்ளது.