tamilnadu

img

மீண்டும் கோவாவிடம் அடிவாங்கிய சென்னை அணி

இந்தியாவில் கால்பந்து விளையாட்டைப் பிரபலப்படுத்தும் வகையில் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) என்ற பெயரில் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.   இந்த தொடரின் 6-வது சீசன் தற்போது நடுப்பகுதியை எட்டியுள்ள நிலையில் 46-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணிகள் மோதின. சென்னை நேரு மைதானத்தில் வியாழனன்று 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களின் உற்சாகத்திற்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 17-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சென்னை வீரர்கள் கோட்டை விட்டனர். தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய கோவா வீரர்கள் 26, 41, 46-ஆவது நிமிடங்களில் மூன்று கோல்கள் அடிக்க சென்னை அணி வீரர்கள் அந்த நிகழ்வை வேடிக்கை பார்த்த படி சுழன்றனர். இரண்டாவது பாதியில் சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்தது போலவே 57 மற்றும் 59-ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து கோவா அணிக்குப் பதிலடி கொடுத்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படியே விட்டால் சென்னை அணி முன்னிலை பெற்று விடும் என்ற கடுப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணி 61-ஆவது நிமிடத்தில்  கோலடிக்க சென்னை ரசிகர்கள் சோர்ந்தனர். ஆட்டம் முடியும் தருவாயில் சென்னை (91-ஆவது நிமிடத்தில்) மூன்றாவது கோல் அடித்தும் அந்த கோல் பலனில்லாமல் போக  கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை மீண்டும் வீழ்த்தியது.   9 ஆட்டத்தில் சென்னைக்கு இது 4-வது தோல்வியாகும். 3 போட்டியை டிரா செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களுக்கும் தலா 5 மஞ்சள் அட்டை வழங்கி எச்சரிக்கப்பட்டனர். சென்னை வீரர் எட்வினுக்குச் சிவப்பு அட்டை வழங்கி வெளியேற்றப்பட்டார்.

;