சீத்தாராம் யெச்சூரி கேள்விக்கணை
புதுதில்லி, ஏப்.1- ஏற்கெனவே பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி (PMNRF) என ஒரு ஏற்பாடு இருக்கும் போது, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு என்று பிஎம்கேர்ஸ் (PM-CARES) என்ற பெயரில் புதிதாக அறிவித்து அதன் பேரில் பிரதமரே நிதி திரட்டுவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். இது உள்பட, கொரோனா பாதிப்பு நடவடிக்கை கள் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் பலவும் விமர்சனத்திற்கு உரி யவை எனக் குறிப்பிட்டு 7 கேள்விகளை சீத்தாராம் யெச்சூரி எழுப்பியுள்ளார். அவை வருமாறு:
1 கோவிட் 19 வைரஸ் பாதிப்பு விகிதம் தொடர் பாக முதலில் நமக்கு தெளிவான மற்றும் நேர்மையான தகவல்கள் மத்திய அரசிட மிருந்து தேவைப்படுகின்றன. கோடிக்கணக்கான இந்திய மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது. இதற்கு, அரசு உண்மையான தகவல்களை, விப ரங்களை அளிக்காமல் மக்களின் கவனத்தை தொடர்ந்து திசை திருப்புவதற்கே முயற்சி மேற் கொண்டிருப்பது ஏன்? மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், மத்திய உள்துறை அமைச்சரும் ஒவ்வொரு நாளும் மாலையில் இன்றைக்கு நாட்டின் பாதிப்பு நிலைமை இதுதான், இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்று ஏன் மக்களிடம் சொல்ல மறுக்கிறீர்கள்?
2. இரண்டாவது முக்கிய பிரச்சனை, நமக்கு மிகப் பெரிய அளவில் -மிக பரந்து விரிந்த முறையில் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தேவை. ஆனால் அதில் பல்வேறு கட்டுப்பாடுகள்- விதிமுறைகள் என்ற பெயரில் இன்னும் நீடித்துக்கொண்டிருப்பது, நாட்டில் உண்மையில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வ தற்கு உதவி செய்யாது; அதேபோல, கொரோனா பரவுவதை தடுப்பதற்கான உடனடி தேவையான நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்துச் செல்லவும் உதவி செய்யாது.இன்றைய நிலையில், 10 லட்சம் பேரில் 32 பேருக்குத் தான் இந்தியா பரிசோதனை மேற் கொண்டிருக்கிறது என்ற விபரங்கள் வெளியாகி யுள்ளன. பிரிட்டனில் 10 லட்சம் பேரில் 1921 பேருக்கும், அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் 2600 பேருக்கும் பரிசோதனை செய்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது ஏன்?
3. இந்தியாவின் பல பகுதிகளில் இன்னும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலி யர்கள் உள்பட சுகாதார சேவைகளை வழங்கும் அனைவருக்கும் முக கவசங்கள் கிடைப்பதை உறுதி செய்யாமல் இருப்பது, இந்த விஷயத்தில் தேவையற்ற தாமதம் இன்னும் நிலவிக் கொண்டிருப்பது ஏன்? இதுதொடர்பாக உலக சுகாதார மையம் தொடர்ந்து எச்சரிக்கைகளை அளித்துக் கொண்டே இருக்கிறது. இந்த தாமதத்திற்கு யார் பொறுப்பேற்பது? அரசாங்க மருத்துவமனைகளில் முக கவசங்கள் கூட கிடைக்காமல் கடந்த ஒரு மாதகாலமாக சுகாதாரப் பணியாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் பல இடங்களில் இருந்து வரு வது இன்னுமா அரசாங்கத்தின் காதுகளை எட்ட வில்லை?
4. பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூட்டாட்சி, ஒத்துழைப்பு என்று பேசியவர். ஆனால் இப்போது கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகளின் பிரச்சனைகளையும், கருத்துக்களை யும் காது கொடுத்து கேட்க வேண்டியது அவசியம். அதற்கு மாறாக, அதிகாரத்தை மத்தியில் குவிப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. கேரளாவில் அரசு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் தீவிரமான பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பிரச்சனைகளை கேரள நிதி யமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் மத்திய அரசிடம் எழுப்பியிருக்கிறார். ஒன்று, மிகப் பெரிய அளவில் அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்வது, அனைத்து குடும்பங்களுக்கும் ஒவ் வொ நாளும் தேவையான பொருட்களை தடை யின்றி நேரடியாக சப்ளை செய்வது. இந்த இரண்டை பற்றியும் உடனடியாக கவனிக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் மாநில அரசுகளை மத்திய அரசு கைவிட்டது ஏன்?
5. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போதுதான் மிக மிக அதிகபட்சமாக அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து காத்தி ருக்கிறார்கள். இந்த உதவி மத்திய அரசால் கட்டா யம் செய்யப்பட வேண்டும். இத்தகைய தொழிலா ளர்களுக்கு பொதுமக்களில் பலரும் தனியார் செல்வந்தர்கள் பலரும் மனமுவந்து பல உதவி களை செய்கிறார்கள். அது வரவேற்கத்தக்கதே; எனினும், ஒரு அரசாங்கம் இந்த தொழிலாளர் களை பாதுகாக்க வேண்டிய அடிப்படையான அரசி யல் சாசன கடமையை கைவிட்டு அதை மக்களே சமாளித்துக் கொள்ளட்டும் என்று வேடிக்கை பார்ப்பது எந்தவிதத்தில் நியாயமானது?
6. கொரோனா பாதிப்பு நம்மை பெரிதும் பாதித்துள்ள இந்த தருணத்திலும் கூட, பல்வேறு சக்திகள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சில குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்த மக்களை குறி வைத்து, முத்திரை குத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அனைத்தையும் இழந்து நிற்கும் தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் துண்டாடும் இத்தகைய முயற்சிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதை தடுக்க வில்லை என்றால், இன்றைய இந்திய சுகாதார நிலைமையும் மிகப் பெரிய மனித துயரமும் இன்னும் தீவிரமடைவதற்கே வழி செய்யும். அதை தடுப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது மத்திய அரசு?
7. இவை அனைத்திற்கும் மேலாக, மற் றொரு முக்கிய பிரச்சனையை மத்திய அரசிடம் எழுப்ப வேண்டியிருக்கிறது. பிஎம்கேர்ஸ் என்ற பெயரில் ஒரு பொது தொண்டு நிறுவனம் மார்ச் 28 அன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 போன்று உலகம் தழுவிய தொற்று நோய் காரணமாக எழும் அவசர கால நிலையை எதிர்கொள்வதற்கும், இதுபோன்ற வேறுபல தேசிய பேரிடர்களை எதிர்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கு வதற்கும் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பிரதமர் மந்திரி தேசிய நிவாரண நிதி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு அறக்கட்டளையை உருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கான முடிவு எங்கு எடுக்கப் பட்டது? இந்த அறக்கட்டளை பதிவு செய்யப் பட்டதா? அப்படியானால் எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது? அதன் பதிவு எண் என்ன? இந்த அறக்கட்டளைக்கு கொடுக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80-ஜி பிரிவின்படி விலக்கு உண்டா? இந்த அறக்கட்டளை யின் விதிகள் என்ன? இதன் உறுப்பினர்களாக அறி விக்கப்பட்டிருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் அதன் உறுப்பினர்களா அல்லது பதவியின் அடிப்ப டையில் உறுப்பினர்களா? இந்த அறக்கட்டளை யின் கணக்கினை யார் இயக்குவார்கள்? இதற்கு வரும் நன்கொடை எப்படி செலவிடப்படும்? அதனை யார் முடிவெடுப்பார்கள்? - இப்படி ஏராளமான கேள்விகளை மத்திய அரசின் மேற்கண்ட அறிவிப்பு எழுப்புகிறது, இதற்கான எந்த பதிலும் அரசாங்கத்தின் இணையதளங்களில் இல்லை. எந்த தெளிவும் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட வில்லை. நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. இந்த அரசாங்கம், தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அரசாங்கத்தின் எந்த சட்டவரையறைக்குள்ளும் கொண்டு வராமல் பாஜகவின் வங்கிக் கணக்கு களுக்கு மாற்றி கொண்டது என்பதுதான் அந்த விஷயம். எனவே பிஎம்கேர்ஸ் என்ற பெயரில் நிதி திரட்டுவது யாருக்காக?
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கேள்விக் கணை களை தொடுத்துள்ளார்.