tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யுங்கள்... அசாமில் 12 பாஜக எம்எல்ஏக்கள் மோடிக்கு எதிராக போர்க்கொடி

கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பாஜகஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், அம்மாநில மக்களை பாஜக-வுக்கு எதிராக கொதித்தெழ வைத்துள்ளது. உள்ளூர் பாஜக தலைவர்களே பலர் அக்கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். பிரபல நடிகர்கள் உட்பட முன்னணி தலைவர்கள் பாஜக-விலிருந்து விலகினர். போராடும் பொதுமக்களோடு அவர்களும் இணைந்தனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 12 பாஜக எம்எல்ஏ-க்கள், பிரதமர் மோடியையும், மத்திய அரசின் கொள்கையையும் வெளிப்படையாக எதிர்த்துள்ளனர். இந்த 12 எம்எல்ஏ-க்கள் சார்பில் பாஜக எம்எல்ஏ பத்மா ஹசரிகா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், “அசாமில் பொதுமக்கள் கடந்த 8 நாட்களாக வெளியில் நடமாட முடியாதபடி பயத்தில் உள்ளனர். நாங்களும் பயத்தின் பிடியில்தான் இருக்கிறோம். எத்தனை நாட்களுக்குத்தான் நாங்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க முடியும்” என்றுபிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ள ஹசரிகா, “பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்; நாங்கள் 12 எம்எல்ஏ-க்களும் கட்சியில் இருந்தும்,ஆட்சியில் இருந்தும் விலகினால்தான் பிரச்சனை தீரும் என்றால்- அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.அசாமில் பாஜக, ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் சூறையாடப் படுவதுடன்,  பாஜக எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருவது குறிப் பிடத்தக்கது.

;