tamilnadu

img

பா.ஜ.கவினர் பரப்பிய போலி வீடியோ : 300 வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் வீதிகளில் வசிக்கும் அவலம்

வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இஸ்லாமியர்களின் முகாம் என போலி வீடியோ ஒன்றை பா.ஜ.கவினர் பரப்பியதை அடுத்து, 300 வீடுகள் இடிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் வீதிகளில் வசிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு, கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக குறிப்பிட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி பதிவிட்டிருந்த வீடியோவால் பெரும் சர்ச்சையே ஏற்பட்டது. அவரது ட்வீட்டில், மஹாதேவபுர சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாகவும், அங்கு குடில் அமைத்து திருட்டு, கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும், அந்தக் குடியிருப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என்றும் அரவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முறையாக விசாரிக்காமல், இஸ்லாமியர்கள் தங்கியிருந்த பெல்லாந்தூரில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஜனவரி 19-அன்று இடித்துத் தரைமட்டமாக்கினர். இதனால் பெல்லாந்தூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் அனைவரும் வீதிகளில் வசிக்கும் அவலம் ஏற்பட்டது. 

ஆனால் உண்மையில் அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் அசாம், திரிபுரா மற்றும் வடக்கு கர்நாடகா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், மாநகராட்சி அதிகாரிகளிடம் தங்களுடைய ஆதார், ரேசன், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக் காட்டிய பிறகும் பா.ஜ.க எம்.எல்.ஏவின் பேச்சுக்கு இணங்க மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்புகளை இடித்துத் தள்ளியுள்ளனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்காக ஆதாரங்களை திரட்டி பெங்களூரு மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளார். அதன் பிறகு பா.ஜ.கவினரின் போலி வீடியோவை நம்பி மக்களின் குடியிருப்புகளை தரைமட்டமாக்கிய மாநகராட்சி துணை பொறியாளர் நாராயண சுவாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

;