tamilnadu

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது புயல் சின்னம் உருவானதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில், ஏப்.25-தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருமாறுகிறது.  இதனால் தமிழகத்தில்கன மழை பெய்யும் எனவானிலை ஆய்வு மையம்எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மீன்பிடித் தடைக் காலம் என்பதால் கன்னியாகுமரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரைபகுதி மீனவர்கள் ஏற்கெனவே மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் குளச்சல் முதல் நீரோடி வரையுள்ள மேற்கு கடற்கரையோர மீனவர்களும் வானிலை மைய எச்சரிக்கை காரணமாக கரைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் புதன்கிழமை மாலை குமரி மேற்கு மாவட்ட கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டது. அழிக்கால், பொழிக்கரை, பள்ளம், குளச்சல், மண்டைக்காடு புதூர், நித்திரவிளை, இரையுமன்துறை, பூத்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.ஆக்ரோஷத்துடன் எழுந்த கடல் அலைகள் பலகிராமங்களுக்குள் புகுந்தது. இதில் 75 க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது. கடல் நீர் புகுந்ததால்அங்கிருந்த பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களைநோக்கிச் சென்றனர். குளச்சல், குறும்பனையில் கடல் நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வருகிறார்கள். மேலும் கடற்கரையில் நின்ற படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தினர். குறும்பனையில் ராட்சத அலை எழுந்ததால் சகாயமாதா தெருவில் உள்ள வீடுகளைச்சுற்றி கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டைக்காடு புதூரில் தென்னந்தோப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த பல தென்னை மரங்கள்வேரோடு சாய்ந்தன. கருங்கல் அருகே, மிடாலம், மேல்மிடாலம் பகுதியிலும் கடல் சீற்றம் காணப்பட்டது. கடல் அலை தடுப்புச்சுவரை தாண்டி மேல் மிடாலம் பகுதியில் உள்ள மாதா தெரு, சூசையப்பர் தெரு, பகுதியில் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதியில்மட்டும் சுமார் 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

;