tamilnadu

img

ஏழைகளின் சோற்றில் மண்ணை கொட்டிய மோடி கடலூர் கூட்டத்தில் உ.வாசுகி சாடல்

கடலூர், ஏப்.7-

கடலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷ்சை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில்,“ தமிழக மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும், வீதிகளில் இறங்கி போராடிய கட்சிகள் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இந்த கூட்டணிக்கு மோடி ஆட்சியையும், எடப்பாடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்ற பொது நோக்கம் ”உள்ளது என்றார்.அதிமுக, பாஜக, பாமக கூட்டணி எந்த நோக்கத்திற்காக அமைந்தது, எப்படி உருவானது என்பது நாட்டு மக்களும் தெரியும். இந்த கூட்டணியில் பாமக இணைந்துள்ளது வேடிக்கையானது என்று வாசுகி கூறினார்.அரசியல் அநாகரிகத்தின் உச்சக்கட்டம் தான் இந்த ராமதாஸ். அதிக சீட்டு யார் கொடுப்பார்கள். யாரிடம் கூட்டணி வைத்தால் அதிகமாக நோட்டு கிடைக்கும். மகன் அன்புமணியை அமைச்சராக்க முடியும் என்பதுதான் பாமகவின் கொள்கை என்றும் அவர் கடுமையாக சாடினார். சுய கவுரவத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்த ஏழைகளை கடனாளிகளை மாற்றியவர் தான் பிரதமர் மோடி. விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறுகிறார். கல்விக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்கிறார். ஆனால், பெருமுதலாளிகள் வாங்கிய நான்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். 11 லட்சம் கோடி கடனை வராக்கடனாக மாற்றியுள்ளார். எனவே, கடந்த 5 ஆண்டுகளில் சிந்திய கண்ணீருக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஏப்ரல் 18-ஆம் தேதி கொடுக்க வேண்டும் என்றும் வாசுகி தெரிவித்தார்.இந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், பி.கருப்பையன், எம்.மருதவாணன்,மாவட்டக் குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ்கண்ணன், எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி, நகரச் செயலாளர் து.ராஜா, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ.ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பா.தாமரைச்செல்வன், செந்தில், சிபிஐ துணைச் செயலாளர் குளோப், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

;