tamilnadu

புதுச்சேரி,கடலூர் முக்கிய செய்திகள்

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது
புதுச்சேரி, பிப்.11- புதுச்சேரி சட்டப்பேரவை புதனன்று (பிப். 12) கூடுகிறது.  இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணிக் கட்சிகள் சார்பில் சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு  வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்  கையும் வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று முதல்வரும் பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம் என்று சமீபத்தில்  ஒரு நிகழ்சியில் கூறியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி சட்டப்  பேரவை புதனன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது.  கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்க ளில் நிறைவேற்றியது போல் குடியுரிமை சட்டத்திருத்த தீர்மானத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து புதுச்சேரி பேர வையில் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வருக்கு திங்களன்று (பிப்.10) கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி பொருட்படுத்தவில்லை என தெரி கிறது. மேலும் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சட்ட மன்றத்தில் அதற்கான பதில் அளிக்கப்படும் என செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்
கடலூர், பிப்.11- காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை, சட்டப் பேரவையில் தனிச் சட்டமாக இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்திள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர்கள் பி.கற்பனைச்செல்வம், மகாலிங்கம், அன்னம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காவேரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என தமிழக முதல்வர் அறிவித்ததை வரவேற்கின்றோம். அதை சட்டமன்றத்தில் தனிச் சட்டமாக இயற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக 13ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்படுகிறது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.