tamilnadu

செய்தித் துளிகள்

என்எல்சி விபத்து: பலி 8 ஆக உயர்வு

நெய்வேலி என்எல்சி-யில் 2வது அனல் மின்நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிரந்தர தொழிலாளி சிவக்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று (ஜூலை 5) மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 25,000 ஓட்டல்கள் திறப்பு

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என அரசு அறிவித்து உள்ளது. கடைகள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம்  முழுவதும் 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கட சுப்பு தெரிவித்துள்ளார்.  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓட்டல்கள் இயங்கும் என்றும், பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்றார்.

அரசு - அண்ணா பல்கலை. மோதல்

ஊரடங்கு தளர்வால் ஜூலை 6 முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும். பேராசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் 4 வளாக கல்லூரிகளும் இயங்கும் என பதிவாளர் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் செயல்பட அரசு தடைவிதித்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2-வது முறையாக தொற்று

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 13-ம் தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட அவருக்கு மீண்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவசியமின்றி வெளியே வரக்கூடாது

சென்னையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம். மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது வீடுகளில் நடத்திய சோதனையில், அது புரளி என தெரியவந்தது. விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ்வர் மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்து காவல்துறையினர் எச்சரித்தனர்.

30 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் 946 பேருக்கு தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 946ஆக அதிகரித்துள்ளது.

சாராய ஊறல் அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கானமலை பகுதியில் 400 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர்.

தடை

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்டத்தில் காவல் நண்பர்கள் குழுவினர் காவல் பணியில் ஈடுபடக் கூடாது என தடைவிதித்துள்ளார்.

மதுபான பாட்டில்கள் கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்நத்தம் பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு 1.66 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 

அபராதம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள ஞாயிறன்று தடையை மீறி இறைச்சிக் கடையை திறந்து விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அங்கிருந்த 200 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தயார் நிலையில் ரயில் பெட்டிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து, கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ள 10 ரயில் பெட்டிகள் சென்னையில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.