tamilnadu

கடலூரில் வாக்குப்பதிவு எந்திரங்களுடன் 11,435 அலுவலர்கள்

கடலூர், ஏப். 17- கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது. வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள், பணியாளர்கள் ஆகியோரை அனுப்பி வைக்கும் பணி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தொகுதிக்குட் பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப் பட்டது. தொடர்ந்து, அவர்கள் முன்னிலையில், ஏற்கனவே கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்காக மண்டல அலுவலர்களுக்கான வாகனங்களில் காவல்துறையின் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டன.மாவட்டம் முழுவதும் 195 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்றப்பட்டன. அவைகள், அங்குள்ள வாக்குப்பதிவு அலுவலரிடம் உரியமுறையில் ஒப்படைக்கப் பட்டன. இப்பணிகளை அந்தந்த வட்டாட்சியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை சார் ஆட்சியர் கே.எம்.சரயூ ஆய்வு செய்தார்.ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலகத்திலும் வாக்குப்பதிவிற்கான வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு செய்யும் இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் எந்திரம் மற்றும் சுமார் 80 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர், மற்றும் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள் இடம் பெறுவார்கள். வாக்குச்சாவடிகளின் நிலையைப் பொறுத்து காவல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.


1,166 வெப் கேமராக்கள்

இம்மாவட்டத்தில் 163 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 4 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு அங்கு முழுமையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது.அதே போன்று, 1,166 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் அறையில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெப்கேமரா மூலமாக அங்கு நடைபெறும் சம்பவங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்க முடியும்.


;