tamilnadu

img

சிறந்த மொழிபெயர்ப்பாளர் கே.பாலகிருஷ்ணன் காலமானார்

சென்னை,மார்ச் 7- சிறந்த மொழிபெயர்ப்பாளரும் தீக்கதிர், ஜனசக்திமுன்னாள் உதவி ஆசியருமான தோழர்.கே.பாலகிருஷ்ணன் வெள்ளியன்று (மார்ச் 6) சென்னையில் காலமானார். வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் இளைய சகோதரர் சங்கரன்  இல்லத்தில் வசித்து வந்த தோழர் வி.கே. பாலகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது  உடலுக்கு கேரள சமாஜம் செயலாளர் கும்மளங்காடு உன்னிகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் என். ஸ்ரீதரன், கே. ஆர். ஸ்ரீதரன், கே.ஆர். கோபக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, வட சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து, தீக்கதிர் தலைமை நிருபர் சி. ஸ்ரீராமுலு, வடசென்னை மாவட்ட செய்தியாளர் ஜாபர் உசேன், கொளத்தூர் பகுதி செயலாளர் ஹேமாவதி, பத்திரிகையாளர் விஜய் ஆனந்த், உள்ளிட்ட ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.சனிக்கிழமையன்று பிற்பகல் 3 மணிக்கு திரு.வி.க நகர் தாங்கல் மயானத்தில் பாலகிருஷ்ணன் உடல் எரியூட்டப்பட்டது.

மொழிபெயர்ப்பே உயிர்மூச்சு

மெலிந்த தேகம், கலைந்த கேசம் அழுக்கு வேட்டி, கை மடித்த வெள்ளை சட்டை எப்போதும் புகையும் பீடியுடன் கையில் ஒரு மலையாள பத்திரிக்கையுடன்  மொழிபெயர்ப்பு வேட்டைக்கான காத்திருப்புடன் அலைந்தவர் வி.கே.பாலகிருஷ்ணன். கேரளத்தில் வடகரா பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது தாய்மாமனுடன் சிறு வயதிலேயே கோவை வந்துவிட்டார். தமிழ் மொழிக் கல்வி, தானே ஆர்வத்துடன் கற்றுக் கொண்ட மலையாளம் என இரு மொழிகளில் இலக்கிய ஆர்வம் அவரை தொற்றிக் கொண்டபோது அவர் அச்சகத்தில் பைண்டிங் பிரிவில் கூலியாக வேலை செய்தார். தமிழின் முற்போக்கு இடதுசாரி சார்பான வாசகர்கள் தமிழில் பொற்றேகாட், குஞ்ஞப்துல்லா, எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன்,கோவிந்த பிள்ளை போன்ற மலையாள உலகின் படைப்பாளிகளை அறியக் காரணகர்த்தாவாக இருந்தவர். வெள்ளானூர் கிருஷ்ணகுரூப் பாலகிருஷ்ணன்.பெற்றோர் கேரளத்தவராக இருந்தாலும் கோயம்புத்தூரிலிருந்த தன் தாய்மாமா வழியாகத் தமிழ் வழிக் கல்வி பெற்றார் பாலகிருஷ்ணன். பின்னர் மலையாளத்தை சுய ஆர்வத்தில் கற்றுக் கொண்டார்.

தீக்கதிர் ஊழியர்

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தால் வசீகரிக்கப்பட்டு 1959-ல்  , கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ஜனசக்தியில் மாஜினி வழியாக இணைந்தார். ஜனசக்தியில் இவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் சோலை, என.ராமகிருஷ்ணன் ஆவர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்து அப்பு தலைமையில் தீக்கதிர் நாளிதழ் தொடங்கிய பொழுது அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பாலகிருஷ்ணன்.பைண்டராக ஜனசக்தியில் காலடி வைத்தவர் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டார்.

மொழிபெயர்ப்பாளர்

தோழர். ராவுன்னி ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன்  மலையாள செய்திகளை மொழிபெயர்த்து தீக்கதில் வெளியிட காரணமாக இருந்தார். தீக்கதிரின் தொடக்கக் காலத்தில் இ.எம்.எஸ், ஏ.கே.ஜி போன்றோரின் உரைகளை மொழி பெயர்க்கும் பணிகளைச் செய்து வந்தார்.முக்கியமான போராளிகள் பலரின் எழுத்தை இவர் வழியாகப் பொன்னி, சென்னை புக்ஸ், பாரதி புத்தகாலயம் தமிழுக்குத் தந்தது.பாப்லொ நெருடா, அந்தோனி கிராம்ஸி, ஐசக் தாமஸ், பாவ்லொ ப்ரையர், பிஜூபாய்பகேகா, ஜோதிபாசு போன்றோரின் எழுத்துகளை மலையாளம் வழியாகத் தமிழுக்குத் தந்தவர் வி.கே.பாலகிருஷ்ணன்.

தமுஎகச, கேரள சமாஜ விருதுபெற்றவர்

தோழர்.வி.பி.சி கேட்டுக் கொண்டதால் இவர் மொழிபெயர்த்த யஷ்பாலின் காம்ரேட் நாவல் வெளி வந்து கவனம் பெற்றன.மொழிபெயர்த்த நூல்களைப் பல பதிப்பகங்களுக்குக் கொடுத்தும்,பல பதிப்புகள் கண்டும் அவருக்குக் கிடைத்ததென்னவோ சொற்பம்தான். தமுஎகச-வின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதைத் தனது தீர்த்தகாவடி படைப்பிற்காக 2001-ல் கோவில்பட்டியில் நடைபெற்ற மாநாட்டில் பெற்றார். சென்னை கேரள சமாஜத்தின் விருதை இந்தாண்டு தொடக்கத்தில் பெற்றார்.   60 ஆண்டு காலமாகத் தமிழ், மலையாள முற்போக்கு படைப்புகளைத் தமிழில் தந்து இரு மாநில மக்களுக்கு இடையே இலக்கியப் பாலமாகத் திகழ்ந்தார். தோழர் பாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்ளாமல் தன் தம்பி மகன் சத்யன் , தோழர்கள் அமரந்தா, வேணுகோபால், சென்னை கேரள சமாஜம் அரவணைப்பில் தன் இறுதி வாழ்வைக் கழித்து வந்தார். நல்ல நிலைக்கு வந்து கை நிறையப் பணத்துடன்  ஊருக்குப் போய் வர வேண்டுமென அவருக்கு ஒரு கனவு இருந்தது. 85 வயதைக் கடந்த பின் கேரள சமாஜமும் கேரள பண்பாட்டுத்துறையும் கொடுத்த சன்மானத்தில் சொந்த ஊர்போய் திரும்பி வந்தார் பாலகிருஷ்ணன்.



 

;