tamilnadu

img

உணவின்றி தவிக்கும் கர்நாடக தொழிலாளர்கள்  தவிக்க விட்ட ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் 

கர்நாடகா மாநிலத்தில் இருந்து அழைத்து வந்த கரும்பு வெட்டு தொழிலாளர்களை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் கண்டு கொள்ளாததால் ஊரடங்கு காரணமாகத் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், உணவு, தண்ணீர் இன்றி குழந்தைகளோடு மிகவும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் தோட்டங்களில் கரும்புகளை வெட்ட கர்நாடக மாநிலத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளது . கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் கர்நாடகத் தொழிலாளர்கள், கரும்பை வெட்டி அதைத் தங்களது வண்டிகளில் ஏற்றி, கரும்பு ஆலைக்குக் கொண்டு செல்வார்கள்.

இவர்களும், குடும்பத்தோடு கரும்புத் தோட்டங்களில் வேலை செய்துவிட்டு, அங்கேயே தற்காலிக டெண்ட் அமைத்து தங்கிவிடுகின்றனர். சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊராகச் சென்று, கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து பிழைக்கும், இந்த  மக்கள், ஊரடங்கு காரணமாகத் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தேனியில் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
 

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் ஏராளமான கர்நாடக தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர். குழந்தைகளோடு இருக்கும் இவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற எந்தவித அத்தியாவசிய பொருள்களும் கிடைக்கவில்லை. இரண்டு நாள்களுக்கு மேலாகப் பட்டினியால் தவித்த இவர்களின் நிலை அறிந்த சில தன்னார்வலர்கள்,  மதியம் அவர்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் பேசியபோது, கரும்பு ஆலை நிர்வாகத்தினர்தான் இத்தொழிலாளர்களை ஒருங்கிணைக்கின்றனர். அவர்களிடம் பேசிவிட்டோம். இன்று இரவுக்குள், கரும்புத்தோட்டத்தில் இருக்கும் இவர்கள், ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு, மூன்று வேளையும் சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார் .
 அதேபோல தேனி அருகே வடபுதுப்பட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 55 தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர் .அவர்களுக்கு தொழிலதிபர் சங்கரநாராயணன் தலைமையிலான தன்னார்வலர்கள் உணவுப்பொருட்கள் வழங்கினார் .