tamilnadu

img

கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் அராஜகம்

கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் உள்பட 4 இடங்களில் வெள்ளியன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்க தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுகவினர் தேர்தலை நிறுத்த சொல்லி தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அதிமுகவினர் அத்துமீறல்களால் பல இடங்களில் தேர்தல் தடைபட்டது. இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அம்மாசத்திரம்,தேவனாஞ்சேரி, களம்பரம் ஆகிய 4 இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல்தடைபட்டது.பட்டீஸ்வரத்தில் உள்ள சோழ நாடு தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலின்போது திமுகவினர் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனு வாங்கிய அதிகாரியை மறைத்து வைத்துவிட்டு போட்டியின்றி அதிமுகவினரை தேர்வு செய்ய முயன்றனர் என குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து திமுகவினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ஜூலை 5 நடத்த உத்தரவிட்டது.அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. அப்போது அங்கு வந்த அதிமுகவினர் வாக்குப்பதிவு அறைக்குள் புகுந்து தேர்தலை நடத்தக் கூடாது என தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் திமுகவினரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி தேர்தல் நடத்தப்படுகிறது என தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கிருந்து அதிமுகவினரை அப்புறப்படுத்தினர் அதன் பின்னர்வாக்குப்பதிவு தடையின்றி 2579 உறுப்பினர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இதே போல அம்மா சத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் பாதுகாப்புடன் நடந்தது. அப்போது அங்கு வந்த அதிமுகவினர் தேர்தலை நடத்த கூடாது என தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடக்கிறது என தேர்தல் அதிகாரி கூறியதால் அதிமுகவினர் அங்கிருந்து சென்றனர். மேலும் தேவனாஞ்சேரி, களம்பரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் அதிமுகவினர் தேர்தலில் நிறுத்தும்படி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது வாக்குப்பதிவின்போது சங்க கட்டிடம் முன் சாலையில் நீண்ட வரிசையில் சங்க வாக்காளர்கள் நின்று வாக்களித்தனர்.
 

;