மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி
சென்னை, மார்ச் 7- திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் (வயது 98) உடல்நலக் குறை வால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் காட்டூர் எனும் கிராமத்தில் கல்யாணசுந்த ரம் - சுவர்ணாம்பாள் தம்பதி யருக்கு 5 குழந்தைகளில் மூத்தவ ராக 1922ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று பிறந்தார். இவரது இயற் பெயர் ராமையா. தந்தையின் வழியில் பெரியாரின் கொள்கை யால் ஈர்க்கப்பட்டார். மறைமலை யடிகளாரின் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டால், தனது பெயரை அன் பழகன் என மாற்றிக் கொண்டார்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிஏ தமிழ் (ஹானர்ஸ்) படிப்பை முடித்த அன்பழகன், 1944 முதல் 1957 ஆம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணி யாற்றினார். இவர் 1957ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) இருந்தார். 1967ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், புரசைவாக்கம், பூங்கா நகர், அண்ணாநகர், துறைமுகம் ஆகிய தொ குதிகளில் 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இறுதியில் 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில்போட்டி யிட்ட அவர் தோல்வியைத் தழுவினார்.
1971ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2 முறை கல்வித்துறை அமைச்சராகவும், ஒருமுறை நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1977ஆம் ஆண்டு முதல் தாம் இறக்கும் வரை, தொடர்ந்து 43 ஆண்டுகள் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார். வாழ்க திராவிடம், தமிழர் திருமணமும் இனமானமும் உட்பட மொத்தம் 16 நூல்களை எழுதியுள்ளார். 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.
தலைவர்கள் அஞ்சலி
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி,கனிமொழி எம்.பி., திக தலைவர் கி.வீரமணி, சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நா.பெரியசாமி, ஐயுஎம்எல் தலைவர் காதர்மொய்தீன், காங் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, எச். வசந்தகுமார் எம்பி.,கார்த்திக் சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பேரா சுப.வீரபாண்டியன், கவிஞர் வைர முத்து, நடிகர்கள் சத்யராஜ், ரஜினி காந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்பழகன் மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது. அவரது உடல் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானத்தில் எரியூட்டப் பட்டது.