tamilnadu

img

நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளில் சிபிஎம் தலைவர்கள் ஆய்வு

உதகமண்டலம், ஆக. 12- நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி. ரவீந்திரன், சி. பத்மநாபன், ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். வாசு, கே.ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. ராஜேந்திரன், லீலா வாசு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் அடையாளகுட்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மழை வெள்ளத்தால் வீடுகளிலிருந்து நடுவட்டம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திரா நகர் பகுதி மற்றும் அனுமாபுரம் நடுவட்டம் உள்ளிட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்தனர். மழையினால் வீடுகள் இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கூடலூர் பகுதியில் அத்திப்பாளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புறமணவயல் பழங்குடி மக்கள், காடம்புழா கொக்கோ கார்டு பகுதி மக்கள் ஆகியோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மக்களிடம் தெரிவித்தனர். பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர்கள் கூறியதாவது: 

மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உடனடியாக வீடுகள் கட்டித் தரவேண்டும். விவசாயப் பயிர்களை இழந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மாற்று இடம் வழங்கிட வேண்டும். மழையினால் வேலை இழந்த கூலி தொழிலாளர்களுக்கு வேலை இல்லா கால நிவாரணத்தை அரசு வழங்கிட வேண்டும். கூடலூர், பந்தலூர், நடுவட்டம் பகுதியில் மின்சாரம் இல்லாது வீடுகளுக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்கிட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நில பட்டா வழங்க தடை செய்யப்பட்டுள்ள அரசாணை 1168 ஐ உடனடியாக ரத்து செய்யவேண்டும். மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் வெள்ள நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த தலைவர்கள், கனமழையால் பாதிக்கப்பட்டு வேலை இழந்துள்ள கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட குழுவின் சார்பிலும் இதர மாவட்டங்களிலும் வெள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. சேகரிக்கப்பட்ட பொருட்களை ஓரிருநாட்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேரடியாக சென்று வழங்குவது என மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட குழு முடிவு செய்து உள்ளது.

;