tamilnadu

img

எது சிறந்த தீமை? எஸ்.பி.ராஜேந்திரன்

2020 நவம்பர் 3 அன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத - முற்றிலும் வேறுபட்ட சூழலில் இத்தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்று, அமெரிக்க அரசியலை முற்றிலும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இதுவரை ஒரு லட்சத்து 92ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தேர்தல் நடக்கும் போது சுமார் 2.5லட்சம் அமெரிக்கர்களின் உயிரை கொரோனா பறித்திருக்கும். இத்தகைய வரலாறு காணாத மருத்துவ நெருக்கடி ஒரு புறம் இருக்க, அதன்விளைவாக ஏற்பட்டுள்ள - ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக நெருக்கடி 1930களில் ஏற்பட்ட உலகப்பொருளாதார பெருமந்தத்தை விடவும் மிகப்பெரியதாக மாறியிருக்கிறது.

300லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்க மக்கள் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் வேலை இழந்திருக்கிறார்கள். அவர்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் அரசு வழங்கும் நிவாரணத் திட்டத்தால் உயிர் வாழ்ந்து வந்தார்கள். ஜூலை  மாத இறுதியோடு அந்தத் திட்டத்தை டிரம்ப் அரசு கைகழுவிவிட்டது. வேலை பறி போனவர்களுக்கு இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வாரமும் 600 டாலர் நிவாரணம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது 300 டாலராக குறைக்கப்பட்டு கடைசியாக எதுவும் இல்லாமல் முடிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க உழைக்கும் வர்க்கம் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வரலாறு காணாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே உச்சபட்ச சாட்சியமாகும்.

எனவே, வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவேண்டுமென டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டா லும் அவரை தூக்கியெறிவதற்கு மக்கள் தயாராகக் காத்திருக்கிறார்கள். டிரம்ப்புக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த குடியரசுக் கட்சியிடம் ஆள் இல்லை.  எனவே அவரையே மீண்டும் நிறுத்தியுள்ளது. இவரது துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக்பென்ஸ் மீண்டும் நிற்கிறார்.டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை தேர்தலில் சாதகமாகப் பயன்படுத்தி எப்படி எளிதாக வெற்றிபெறுவது என கணக்குப் போட்டு களத்தில் இறங்கியிருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி.

இரண்டு தீமைகள்
உலகின் ‘பழைமையான’ ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொண்டாலும் குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சி என்ற இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்வதைத் தவிர அமெரிக்க மக்களுக்கு அவர்களது ஜனநாயகத்தில் இடம் இல்லை. இப்போது டிரம்ப் எனும் ‘அதிபயங்கரத் தீமையை’ விட குடியரசுக் கட்சி நிறுத்துகிற ஜோ பிடேன் எனும் ‘பயங்கரத் தீமை’ பரவாயில்லை என்ற முடிவுக்கு அமெரிக்க மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு முறையும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இப்படித்தான் நடக்கும். இவர் தீயவர் என்று ஒருவரை நிராகரித்துவிட்டு அமெரிக்க மக்கள் புதிதாகத் தேர்வு செய்யும் மற்றொருவர் அவரைவிட பெரிய தீமையாகமாறியிருப்பார். ஜனநாயகக் கட்சியோ அல்லது குடியரசுக் கட்சியோ இரண்டுமே வேறு வேறு கட்சிகள் என்ற போதிலும், நடைமுறை அளவில் இருவருக்குமிடையில் சில வேறுபாடுகள் உள்ளன என்ற போதிலும், இரு கட்சிகளுமே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இரண்டு கோஷ்டிகள் தானே தவிர வேறு அல்ல.
வரலாறு நெடுகிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரு கட்சிகளின் ஜனாதிபதிகளது செயல்பாடுகளே இதற்கு சாட்சியம். 1988ல் ரொனால்டு ரீகனை தோற்கடிப்பதற்காக டுகாகிஷ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது ஆட்சி சகிக்கவில்லை என்று அதற்குப் பிறகு 1992ல் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷை தேர்ந்தெடுத்தார்கள். அவரது கொடுமை தாங்காமல் பில் கிளிண்டனிடம் சரணடைந்தார்கள். அவரும் சரியில்லை என்று இரண்டாவது ஜார்ஜ் புஷ்ஷை  தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் யாருமே சரியில்லை என்றும் நம்பிக்கைக்கும் மாற்றத்திற்கும் வித்திடுகிற வேட்பாளர் என்றும் மிகப்பெரிய பிரச்சாரம் செய்து பாரக் ஒபாமாவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்தான், இரண்டாவது ஜார்ஜ் புஷ்ஷை விட போர்களை அதிகமாக நடத்தினார் என்று அவப்பெயர் பெற்றார்.எனவே ஜனநாயகம் என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயகப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

பெர்னி சாண்டர்ஸ்
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த ஓராண்டுக்கும்மேலாக அமெரிக்க அரசியலில் ஒரு சிறு ஒளி தோன்றியது போல, பெர்னி சாண்டர்ஸை பலரும் புகழ்ந்தார்கள். உண்மையில் அவர் சற்று புகழ்ச்சிக்கு உரியவர்தான். அமெரிக்க ஜனநாயகத்திற்குள் இருக்கும் கொடிய தன்மையை அவர் அம்பலப்படுத்தினார். அமெரிக்க உழைக்கும் மக்களுக்கு உண்மையான சில தீர்வுகளை முன்னிறுத்தினார். டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின்பு அவரது கொடிய பாசிச நகர்வுகளை அம்பலப்படுத்தினார். இதனால் மக்கள் மத்தியில் சாண்டர்சுக்கு செல்வாக்கு கிடைத்தது. 2020 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப்பின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகிவிடுவாரோ என்ற அளவிற்கு சாண்டர்சின் செல்வாக்கு அமெரிக்க மக்கள் மத்தியிலும் ஜனநாயகக் கட்சிக்குள்ளும் அதிகரித்தது. ஆனால் அவர் அமெரிக்க பெருமுதலாளிகளின் - கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனை பிரதானமாக முன்னிறுத்தாததால், சோசலிச சிந்தனையை பரப்புகிறாரோ என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் சந்தேகப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தலில் பெர்னி சாண்டர்ஸை வேகவேகமாக தோற்கடித்து, டிரம்ப்புக்கு இணையான அதிதீவிர வலதுசாரியான ஜோ பிடேனை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு கோஷ்டி முன்னிறுத்தியது. ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவரையே தேர்வு செய்ய வைத்தது.

ஜோ பிடேனும் கமலா ஹாரீஸும்
டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகப் பெரும் ஆயுத வியாபாரிகள் உள்ளிட்ட தரப்பினர், அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். குறிப்பாக, ரஷ்யாவை மிக தீவிரமாக எதிர்த்து நிற்காதது போன்ற டிரம்ப்பின் வெளியுறவு கொள்கைகளால், ஆயுத உற்பத்தியை அடித்தளமாக கொண்ட அமெரிக்க பெரும் கார்ப்பரேட்டுகள், ஜோ பிடேன் தங்களுக்கு பொருத்தமான கையாளாக இருப்பார் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.ஜோ பிடேனை போலவே அனைத்து விதத்திலும் பொருத்தமான ஒரு அதிதீவிர வலதுசாரியை துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக நிறுத்த நினைத்தார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்தான் கமலா ஹாரீஸ்.

அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக கமலா ஹாரீஸ் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவில் இருக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஒரு தரப்பினர் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் கமலா ஹாரீஸ், ஜமைக்காவுக்கும் சொந்தமானவர். அவரது கணவர் ஹாரீஸ், ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த கறுப்பினத்தவர். சான்பிரான்சிஸ்கோ மாவட்டத்திலும், பின்னர் கலிபோர்னியா மாகாணத்திலும் அமெரிக்க அரசின் வழக்கறிஞராக பணியாற்றிய கமலா ஹாரீஸ், 2017 இல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார்.கொரோனா சுகாதார நெருக்கடிக்கு இடையே, மின்னப்போலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்டு என்ற நடுத்தர வயது கறுப்பின இளைஞர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளால் கொடூரமான முறையில் முழங்காலால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் கறுப்பின மக்களின் பேரெழுச்சி எழுந்த நிலையில், அந்த உணர்வுகளுக்கு ஒரு வடிகால் அளிக்க வேண்டியதும்; அதே வேளையில் கறுப்பின மக்களின் வாக்குகளை டிரம்ப்புக்கு எதிராக ஒட்டு
மொத்தமாக குவிக்க வேண்டியதும் ஆகிய இரண்டு மாங்காய்களையும் கமலா ஹாரீஸ் என்ற ஒரே கல்லில் அடிக்க முயற்சித்திருக்கிறது ஜனநாயகக் கட்சி.

கமலா ஹாரீஸ் என்ற ஆசிய அமெரிக்கரை - ஆப்பிரிக்க அமெரிக்கரை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்ற மிக உயரிய பொறுப்பில் அமர்த்துவதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு இதைத் தவிர வேறு காரணமில்லை.பாரக் ஒபாமாவைப் போலவே, கமலா ஹாரீசும் அதிதீவிர வலதுசாரி பெண் அமைச்சர்களான கிளாரன்ஸ் தாமஸ், கண்டோலிசா ரைஸ், மெடலின் ஆல்பிரைட், சூசன் ரைஸ், ஹிலாரி கிளிண்டன் போன்றவர்களுக்கு எந்தவிதத்திலும் மாற்றாக இருக்கப் போவதில்லை. இன்னும் சொல்லப் போனால், கமலா ஹாரீஸ் தனது பொது வாழ்வு முழுவதிலும் தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டவர். கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க போலீஸ் நடத்தும் அட்டூழியங்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் வாதாடியவர்; தொழிலாளர்களையும், வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்களையும் சட்டவிரோதிகள் என்று தனது வாதத்தால் முத்திரைகுத்தி பலமுறை சிறைக்கு அனுப்பியவர்; அமெரிக்காவின் கொடிய யுத்தங்களை எப்போதுமே ஆதரித்தவர். அதனால்தான் அமெரிக்க கார்ப்பரேட் பெருமுதலாளி களின் தலைமையிடமான வால்ஸ்ட்ரீட்டின் பெரும் முதலாளிகளது அன்பைப் பெற்ற ஒரு துணை ஜனாதிபதி வேட்பாளர் என்று பாராட்டுகிறது நியூயார்க் டைம்ஸ் ஏடு. 

கொரோனா துயரம் அமெரிக்காவை இன்னும் பல ஆண்டு காலம் ஆட்டிப் படைக்க இருக்கிறது. ஏனென்றால் அதிலிருந்து வெளிவரும் விதத்தில் டிரம்ப் அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மரணவிகிதம் தொடர்ந்து அதிகமாகவே நீடிக்கும் நிலையிலும் தொழிற்சாலைகளை மட்டுமின்றி, பள்ளிகளையும் திறப்பதற்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். தங்களது வாழ்வை இழந்த அமெரிக்கர்கள், தங்களது குழந்தைகளையாவது டிரம்ப் எனும் அதிபயங்கர ஜனாதிபதியிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று விரும்புகிறார்கள். எனவே அவர்கள் ஜோ பிடேன் - கமலா ஹாரீஸ் என்ற ஜனநாயகக் கட்சியின் முன்மொழிவை தேர்வு செய்ய காத்திருக்கிறார்கள். வெற்றி நிச்சயம் என்ற நிலைக்கு பிடேன் சென்றுவிட்டார்.  இரு தரப்பிலும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் நடத்தும் அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நான்காண்டு காலத்தில் இன்னும் அதிகபட்சம் எப்படியெல்லாம் மூலதனத்தை குவிப்பது என்பதற்கான காய் நகர்த்தல்கள் துவங்கியிருக்கின்றன.

===எஸ்.பி.ராஜேந்திரன்===

;