tamilnadu

img

தொற்றுநோயுடன் தவறான எண்ணங்களும் இணைந்தே சமூகத்தில் தோன்றுகின்றன - அமிதங்சு  ஆச்சார்யா

நியூயார்க் லாங் தீவில் மேல்தட்டினர் வசிக்கின்ற இடங்களில், 1900களின் முற்பகுதியில் விசித்திரமான நிகழ்வொன்று நடைபெற்றது. அங்கே வசித்து வந்த பலருக்கும் மிகவும் மர்மமான  முறையில் டைபாய்ட் நோய் தொற்றியது. அசுத்தம், வறுமை ஆகியவற்றுடன் தொடர்புடைய அந்த நோய், தூய்மையான, வளமான வசிப்பிடத்திலே தோன்றியதால், அந்த நகரத்தின் மருத்துவ  நிர்வாக அமைப்பி நிலைகுலைந்து போனது.  

இந்த நிகழ்வு குறித்து விசாரிக்குமாறு ஜார்ஜ் சோப்பர் என்ற சுகாதாரப் பொறியாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார். டைபாய்ட் நோயால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பங்களில், குறைந்தது எட்டு  குடும்பங்களில் ஐரிஷ் பெண்ணான மேரி மல்லன் என்ற சமையல்காரர் பணிபுரிந்து வந்ததை சோப்பர்  கண்டுபிடித்தார். தன்னை ஆரோக்கியமானவராக வைத்துக் கொண்டிருந்த மல்லன், ஒவ்வொரு முறையும் நோயாளி ஒருவரை உருவாக்கிய பிறகு வேறொரு குடும்பத்திற்குச் சென்று விடுவார். தேடுதல் வேட்டையில் இறங்கிய சோப்பர். மல்லன் வசித்து வரும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக, அவரைப் பின்தொடர்ந்தர். இறுதியில் மல்லன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த அவர், மல்லனை நேருக்கு நேர் சந்தித்து, டைபாய்டை சுமந்து திரிபவர் என்ற குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தினார். தன்னுடன் ஒத்துழைத்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மறுத்த மல்லனைக் கைது செய்யுமாறு  சோப்பர்  காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டார்.

மல்லனின் விருப்பத்திற்கு எதிராக, ஒரு கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய ரத்தம், சிறுநீர், மலம் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனை முடிவுகள் வெளிவந்த போது, டைபாய்டை ஏற்படுத்துகின்ற பாக்டீரியாவான சால்மோனெல்லா டைஃபி  மல்லனிடம் இருப்பதையும், பொதுமக்களின் அதிருப்தி என்ற கயிறு அவருடைய கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கொண்டிருப்பதையும் அவர்கள்  காண்பித்தனர்.

‘உடல்நலத்துடன் நோயைச் சுமந்து கொண்டிருப்பவர்கள்’ இருப்பதை - நோயை உருவாக்குகின்ற நோய்க் கிருமிகளை எடுத்துச் சென்று பரப்பும் மக்கள் பாதிக்கப்படாமல் உடல்நலத்துடன்  இருக்கிறார்கள் என்பதை - நிறுவியதற்காக சோப்பர்  கொண்டாடப்பட்டார். அவமானத்திற்குள்ளான மல்லன், வரலாற்றில் ‘டைபாய்டு மேரி’ என்று குறிப்பிடப்பட்டு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகிப் போனார். 

அந்த புனைபெயர் எளிதில் உணர்ச்சிக்கு ஆட்படுகின்ற, திறமையான சமையல்காரராக இருந்த ஏழ்மை நிரம்பிய, கல்வியறிவற்ற, புலம்பெயர்ந்து பணிபுரிந்து வந்த அந்தப் பெண்ணின் மீதான வன்முறை மற்றும் அவதூறுகளை  இயல்பானதாக்கியது. ‘அதிவேகமாக நோயைப் பரப்பியவர்’ என்று மல்லனை பெரும் எண்ணிக்கையில் கொலை செய்த கொலைகாரனுக்கு ஒப்பாக மருத்துவ நிர்வாக அமைப்பும், பத்திரிகைகளும் சித்தரித்தன. 51 பேருக்கு தொற்றை மல்லன் கடத்தியதாக நம்பப்பட்டது, அவர்களில் மூன்று பேர் இறந்து போயினர். இருந்தாலும் இதுகுறித்து சரியான எண்ணிக்கையை நிறுவுவது மிகக்கடினமான செயலாகும்.

எதிரியைக் கண்டறிவது

நார்த் பிரதர் தீவில் உள்ள ரிவர்சைடு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக இருந்த ஓரிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மல்லன், 26 ஆண்டுகளாக அந்த இடத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.  இறுதியாக 1938ஆம் ஆண்டு அவர் அங்கேயே இறந்து போனார். அந்தோணி போர்டெய்ன் என்பவர் ’டைபாய்டு மேரி: ஆன் அர்பன் ஹிஸ்டாரிகல்’ (2001) என்ற புத்தகத்தில் தனது சக சமையல்காரர்களைப் பற்றி மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். ’சமையல்காரர்கள் நோயுடன் பணிபுரிகிறார்கள். அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். பெரும்பாலும் வேலை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது.  தும்மல், மூக்கு ஒழுகுதல்,  தொண்டை புண்ணுடன்  எழுந்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, வேலைக்கான நேரத்தை ஒதுக்குவார்கள். கழுத்தைச் சுற்றி துண்டைப் போட்டுக் கொண்டு, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். வலி மற்றும் நோயுடன் வேலை செய்வது அவர்களுக்குப் பெருமையாக இருக்கும்’ என்று அவர் எழுதியிருக்கிறார்.

நியூயார்க் நகரத்தைப் பொறுத்தவரை டைபாய்டு நோய்ப்பரவல் புதிதல்ல என்றாலும், ஒரு பொது எதிரியாக, நோயை விட ஆபத்தானவராகக் கருதப்பட்டே மல்லன் தனிமைப்படுத்தப்பட்டார்,  பிராங்க்ஸிலிருந்து லாங் தீவைப் பிரித்து வைத்திருக்கின்ற வர்க்கப் பிளவிற்கு, அந்த நோய்க்கிருமிகள் சிறிதும் மரியாதை தரவில்லை என்பதை பணக்காரர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும்  நினைவூட்டியதே, மல்லன் செய்த மிகப்பெரிய குற்றமாக இருக்கலாம்.

மக்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் கதை, சிக்கலான பரிணாம உறவு குறித்த கதையாக இருக்கிறது. நோய்க்கிருமிகள் வாழவும், வளரவும் விரும்புகின்றன. அவை மனிதர்களை – ஆதார உயிரிகளை -  கொல்வது என்பது தாங்களாகவே தங்களைத் தோற்கடித்துக் கொள்ளும் முயற்சியாகவே இருக்கும். இருவருமே தாங்கள் பரஸ்பரம் பிழைத்திருப்பதற்காக முயற்சிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, இருவரும் ஒரு குழப்பமான போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னர் மனிதர்கள்  நோய்க்கிருமியுடன்  வாழத் தொடங்குகிறார்கள். இதற்கு முன்பும் நாம் இவ்வாறு பல முறை செய்திருக்கிறோம். புதிய கொரோனா வைரஸுடனும் அதையே திரும்பச் செய்யப் போகிறோம்.

தொற்றுநோயிலிருந்து இவ்வாறு வெளிப்படுகின்ற உயிரியல் சகவாழ்வானது, அதன் சமூக விளைவுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.  சமூக விருப்பம் என்று எதுவும் நோய்களிடம் இருப்பதில்லை.  இனம், வர்க்கம், மதம், பாலினம் அல்லது பிற அடையாளங்கள் மூலமாக நோய்க்கிருமிகள் தங்களால் பாதிக்கப்படுபவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஆனாலும், .தொற்றுநோய் தோன்றுகின்ற ஒவ்வொரு முறையும், மிகஆழமாக வேரூன்றியிருக்கின்ற, பெரும்பாலும் திகிலூட்டும் முடிவுகளை ஏற்படுத்துகின்ற தவறான எண்ணங்களும் சமூகத்தில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன  என்பதை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.  

1348ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மிகப்பெரிய  கொள்ளைநோயான பிளேக் உருவான போது, அந்த கறுப்பு மரணம், கிறிஸ்தவத்தை  பலவீனப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட யூத சதி என்றே  கத்தோலிக்க திருச்சபை உறுதியாக நம்பியது. கிணறுகளில் விஷத்தைத் தூவி நோயைப் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட யூதர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகினர். மேலும் தவறான ஒப்புதல் வாக்குமூலத்தத் தர வேண்டிய கட்டாயம் அவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது. விரைவிலேயே, ஆயிரக்கணக்கான யூதர்களின் மாமிசம் எரிகின்ற துர்நாற்றம் ஸ்ட்ராஸ்பேர்க், கொலோன், பாஸல் மற்றும் மெயின்ஸ் ஆகிய இடங்களில் நிறைந்திருந்த காற்றில் பரவியது.

இதுபோன்ற துன்புறுத்தல்களை ஐரோப்பாவின் ரோமாக்களும் எதிர்கொண்டனர். 1493 மற்றும் 1785 ஆண்டுகளுக்கு இடையில், ஜிங்காரி (ரோமாக்களைப் பிரதிநிதிப்படுத்துகின்ற தனித்துவமான சொல்) இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இத்தாலியில் இயற்றப்பட்ட 121 சட்டங்களை ஜியோர்ஜியோ வியாகியோ என்பவர் இத்தாலிய மொழியில் எழுதிய ஸ்டோரியா டெக்லி  ஜிங்காரி (1997) என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார். தொற்றுநோய்களை ரோமா மக்களே ஏற்படுத்தி பரப்புகின்றார்கள் என்ற  ஒருதலைபட்சமான பார்வையால் தூண்டப்பட்டே இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன.

இடைக்கால ஐரோப்பாவில் பிளேக் நோய் பரவியதற்கு, பாரம்பரிய மருத்துவத்தை கடைப்பிடித்த மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.  ‘மந்திரவாதிகள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு அந்த மக்கள் துன்புறுத்தப்பட்டனர்.  சூனியம் செய்தார்கள் என்று சொல்லி 90,000 பேர் ஐரோப்பாவில் தண்டிக்கப்பட்டனர் என்று வரலாற்றாசிரியர் பிரையன் லெவாக் (2006) மதிப்பீடு செய்துள்ளார்.  சரியான புள்ளிவிவரங்கள் எங்களிடம் இல்லை என்றாலும், அந்த சுமையை பெண்களே சுமந்ததாகத் தெரிகிறது.

கிருமிக் கோட்பாட்டின் வருகைக்குப் பிறகே, பிளேக் நோயைப் பரப்புவோர் மீதிருந்த அந்த இடைக்கால நம்பிக்கை அகன்றது. நோய்களுக்கு மக்கள் காரணமல்ல; அவை நுண்ணியிரிகள் அல்லது நோய்க்கிருமிகளாலேயே பரவுகின்றன. அவற்றால் காற்று, நீர் அல்லது மனிதர்களுக்கு இடையிலான உடல் தொடர்பு வழியாகப் பயணிக்க முடியும். கிருமிகள் சமூக வகைப்படுத்தல்கள் குறித்து எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம்.  நுண்ணோக்கியில் உள்ள தெளிவான லென்ஸ் மூலமாக மட்டுமே, இந்த தொற்றுநோய்களுக்கு காரணமாக இருக்கிற  அரசியலற்ற, ஒழுக்கநெறியற்ற கிருமிகளை ஒருவரால் கண்டுகொள்ள முடியும். தவறான எண்ணங்களால் மெழுகப்பட்டிருக்கும் கண்ணாடிகளின் மூலமாக அல்ல. 

நுண்ணோக்கிகள் கண்டுபிடிப்புகளுக்கான கருவியாக மட்டுமல்லாது, பேரரசின் கருவியாகவும் இருந்தன. ஆங்கிலோ-ஐரோப்பிய நிர்வாகிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற நோய்களால் வெப்பமண்டலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. காலனித்துவ குடிமக்களை விட அவர்களுக்கு எதிராக கொசுக்களே அதிகம் கலகம் செய்தன. நுண்ணோக்கிகள்தான்  வெப்பமண்டல நோய் குறித்த காலனித்துவ புரிதலைக் கொண்டு வந்தன. 1817ஆம் ஆண்டில் ஆசிய காலரா பரவியது. இந்தியாவின் கங்கைப் பகுதியில் உருவானது என்று நம்பப்பட்டதால், அவ்வாறு பெயரிடப்பட்ட அந்த தொற்றுநோய், மிக விரைவில் ஐரோப்பாவிலும் பரவியது. விளைவாக காலனிகளில் தோன்றுகின்ற  நோய்கள்  தங்கள் மீதும் படையெடுக்கும் என்ற  அச்சத்தை அவர்களிடம் தூண்டி விட்டது.

தீவிரமான அறிவியல் ஆய்வுகளுக்கு அது வழிவகுத்துக் கொடுத்தது. 19ஆம் நூற்றாண்டின் மருத்துவ அறிவியல் நோய்களை ஓரிடம் சார்ந்து வகைப்படுத்துவதற்கான எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்து வரலாற்றாசிரியர்  பிரதிக் சக்ரவர்த்தி 2010ஆம் ஆண்டு மிகநுணுக்கமான வகையில் எழுதியுள்ளார். கமா வடிவத்தில் உள்ள காலரா நோய்க்கிருமியான விப்ரியோ காலராவை ராபர்ட் கோச் கண்டுபிடித்திருந்தார். வெப்பமண்டல சூழலுடனும், மனிதர்களின் உடலுடனும், குறிப்பாக, காலனித்துவ குடிமக்களின் குடல் மற்றும் பித்தநீர் பாதையுடன் அவரது கண்டுபிடிப்பு எவ்வாறு பொருத்தப்பட்டது என்பது குறித்து அவர் எழுதியிருக்கிறார்.

பின்னர் தொழுநோய் வந்தது. ’பாவிகள்’ என்று ஒதுக்கி வைக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி கட்டாயப்படுத்திய, சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களைக் குறிக்கின்ற சொல், ‘தொழுநோயாளி’ என்ற சொல்லாக மாறி களங்கம் அடைந்தது. 1891ஆம் ஆண்டில் ’தொற்றுநோயின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது புறக்கணிக்கப்படலாம்’ என்று தொழுநோய் ஆணைய அறிக்கையில் முடிவு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பின்னரும், பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பது அருவருக்கத் தக்கதாகவும், வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருப்பதால், அவர்கள் பொதுவெளியில் வருவதை எதிர்த்து இந்திய மற்றும் ஐரோப்பிய உயர் வகுப்பினர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் விளைவாக 1898ஆம் ஆண்டு தொழுநோய் சட்டம் உருவானது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை அந்தச் சட்டம் தனித்து பிரித்தது. இனப்பெருக்கத்தைத் தடுக்கின்ற வகையில், பாலினப்  பிரிவினையும் பயன்படுத்தப்பட்டது. காலனித்துவ உயரடுக்கினரின் அழகியல் உணர்வுகளை மகிழ்விப்பதற்காகவே, இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டன.

காலனித்துவ அறிவியல் தொற்றுநோய்களை வெப்பமண்டலத்துடன் இணைப்பதாக இருந்த போதிலும், வெளியான ஆய்வுகள் அவ்வாறான கருத்துக்களை மறுசீரமைத்தன. காலரா பரவிய வேளையில் நடப்பதாக தாமஸ் மான்  எழுதிய டெத் இன் வெனிஸ் நாவலில்  ’… கங்கை டெல்டாவின் புழுக்கமான சதுப்பு நிலங்களில் பிறந்து, துர்நாற்றம் வீசுகின்ற மிகப்பெரிய, தகுதியற்ற தரிசு நிலத்தின் வழியாகப் பரவியது. அந்த வனப்பகுதி மனிதர்களால் தவிர்க்கப்பட்டது…’ என்று 'இந்திய காலரா'  என்பதாக அந்த நோய் விவரிக்கப்பட்டிருந்தது. 

கீழையுலக தொற்றுநோய்   

தனது 2018 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில், காலனித்துவ நாடுகளில் நடைபெற்ற இவ்வாறான சம்பவங்களை ’கீழையுலக தொற்றுநோய்’ என்று ஆய்வாளர் அலெக்ஸாண்ட்ரே வைட் குறிப்பிட்டிருந்தார்.  நோய்களுக்கு எவ்வாறு பெயரிடப்பட்டது என்பதற்கு, ஆசிய காலரா (1826), ஆசிய பிளேக் (1846), ஆசிய காய்ச்சல் (1956), ரிஃப்ட் வேலி காய்ச்சல் (1900கள்), மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (2012), ஹாங்காங் காய்ச்சல் (1968) போன்ற சில நோய்களின் பெயர்களை மேற்கோள் காட்டலாம். தொற்று நோய்களை நடுநிலையான, பொதுவான சொற்களைக் கொண்டு பெயரிட  வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு  உருவாக்கியுள்ளது.

இருந்தாலும், தொற்றுநோய்களும், பிற நோய்களுக்கான பெயர்கள் தொடர்ந்து  இனம், பாலினம், பாலியல் விருப்பம் மற்றும்  புவியியல் பகுதி ஆகியவற்றுடனே இணைக்கப்பட்டு வருகின்றன. டிரம்ப் நிர்வாகம் கோவிட் -19ஐ ‘சீன வைரஸ்’ என்றே பலமுறை குறிப்பிட்டது. சிலர் அந்த நோயை ‘குங் காய்ச்சல்’ என்று குறிப்பிட்டனர். இவ்வாறாகப் பெயரிடுவது நோய் குறீத்த தவறான எண்ணங்களை வலுப்படுத்துகின்றது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்க்கு, ஆண் ஓரினச் சேர்க்கையாளர் (கே) தொடர்பான நோயெதிர்ப்பு குறைபாடு (GRID) என்ற சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த சொல் குறுகிய காலமே பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், 80களில் அமெரிக்க தொலைகாட்சி சமயசொற்பொழிவாளர்கள் இதை ‘கே பிளேக்’ - பாலியல் விலகலுக்கான தெய்வீகத் தண்டனை - என்றே குறிப்பிட்டு பயன்படுத்தி வந்தனர். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கை, பல்வேறு நாடுகளில் ஆண்களுடன் (எம்.எஸ்.எம்) உடலுறவு வைத்துக் கொள்கின்ற ஆண்கள் ரத்தம் அல்லது உறுப்புகளை தானம் செய்வதைத் தடைசெய்யும் சட்டங்களுக்குள்ளும் தொடர்ந்து இருந்து வருகிறது.

நம்மிடம் வேரூன்றியிருக்கின்ற தவறான எண்ணங்களைக் காட்டிலும், நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை நம்மால் எளிதாகக் கையாள முடிந்துள்ளது என்றே வரலாறு நமக்குச் சொல்லித் தருகிறது. தொற்றுநோய்கள் வெறுப்பை ஏற்படுத்தாது என்றாலும், வெறுப்பு பெருகுவதற்கு அவை  உதவவே செய்கின்றன.

சீன அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் கோவிட்-19 இன் தோற்றத்தையும், பரவலையும் அது மூடிமறைக்க முயற்சித்தது போன்றவை அமெரிக்காவின் ஸ்திரமின்மையை சீர்குலைப்பதற்கான சதி என்று நம்புவதற்கே டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது. கிறிஸ்தவத்தை நாசப்படுத்த யூதர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டுவதற்காக, கொடூரமாக உற்பத்தி செய்யப்பட்ட நோய் என்ற கருத்தை கத்தோலிக்க திருச்சபை கொண்டிருந்ததை இது நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இதேபோன்று, கொரோனா வைரஸைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் என்று புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிராக ஐரோப்பிய அரசியல்வாதிகளான லு பென் மற்றும் சால்வினி ஆகியோர் பயன்படுத்திய இனவெறி வசைச்சொற்கள், டிரம்பின் சொல்லாட்சியை ஒத்ததாக இருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் பதவிக்கான பிரச்சாரத்தின்போது, மெக்ஸிகோவிலிருந்து குடியேறியவர்கள் குறித்து ’மிகப்பெரிய தொற்று நோய் எல்லையைத்  தாண்டி வருகிறது’  என்று கூறியதன் மூலமாக, ‘பிளேக் நோயைப் பரப்புபவர்கள்’ என்ற வகையில் இருந்த இடைக்கால ஐரோப்பிய சிந்தனையை ட்ரம்ப் புதுப்பித்தார். ஆனால் இப்போது அதற்கு முரணாக, அமெரிக்காவில் இருந்து  நுழைகின்ற நோய் பரப்பிகளிடமிருந்து, மெக்ஸிகோ தான்  தன்னுடைய எல்லைகளைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

இந்தியாவிலும் இவ்வறான தவறான எண்ணங்கள் கோவிட்-19 மூலமாக எழுந்திருக்கின்றன. மருத்துவ ஊழியர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குள்ளே நுழைவதற்கு வீட்டின் உரிமையாளர்கள் தடை விதிக்கின்றனர். சாதி மற்றும் தீண்டாமையின் சொற்களைப் பயன்படுத்தி மக்கள் சமூக இடைவெளி பற்றி பேசுகிறார்கள். இனவெறி கருத்துக்களையும், வெளியேற வேண்டும் என்ற அச்சுறுத்தல்களையும் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக விமானங்களை அனுப்பிய அரசாங்கம், இங்கேயே புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் அளிக்கவோ அல்லது அவர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கவோ தவறி விட்டது. தற்போதைய ஊரடங்கு உத்தரவால், பெருமளவில் தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து வெளியேறி, தங்களுடைய வீடுகளுக்குச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடக்க ஆரம்பித்தனர். தெருக்களிலே தூங்குவது, உணவு மற்றும் தண்ணீருக்காகப் போராடுவது என்று பல்வேறு இன்னலுக்குள்ளாகினர். ஏறக்குறைய 20 பேர் இதுவரை இறந்து விட்டனர். பத்திரிகைகளில் செய்திகள் வெளியான பிறகு, அங்கேயே தங்கிக் கொள்ள விரும்பியவர்களுக்கு நிவாரண முகாம்களை அமைத்து தருவதற்கும், வெளியேற வேண்டும் என்பவர்களுக்கு பயண வசதிகளை ஏற்படுத்தி தரவும் அரசாங்கங்கள் தத்தளிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் இவ்வாறு திரும்பி வந்த தொழிலாளர்களை நோய்க்கிருமிகளாகக் கருதி, அவர்கள் மீது கிருமிநாசினிகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. இத்துடன் புதிய வைரஸ்  பரவல் குறித்து இனவாதம் கொண்ட தவறான எண்ணம், புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் தோள்களின் மீது ஏறிப் பயணித்தது. 

நோய்க்கிருமிகள் குறிப்பிட்ட இனம் அல்லது இடத்தைத் தேடுவதில்லை, அவற்றிற்குத் தேவைப்படுவது இளஞ்சூடான, ஈரமான, ஊட்டச்சத்து நிறைந்த மனித உடல் என்பதை நிரூபிப்பதன் மூலம் பகுத்தறிவற்ற நம்பிக்கைகளிலிருந்து மக்களை அறிவியல் விடுவிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, ஆதார உயிரிகள், நோய் கடத்திகள் மற்றும் நோயைச் சுமந்து செல்பவர்கள் பற்றிய அறிவியல் புரிதலும் கூட, சமூகத்தில் உருவாகும் தவறான எண்ணங்களை வலுப்படுத்துவதற்கு பயன்படுவதாக இருக்கின்றது.

உலகளாவிய தொற்றுநோயின் நெருக்கடியால் சுமத்தப்படுகின்ற இதுபோன்ற களங்கம், நீண்டகாலத்திற்கு நீடித்து இருப்பதாக உள்ளது. மேரி மல்லனைத் தவிர வேறு யாராலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது. தன்னுடைய வாழ்க்கையின் கால் பகுதிக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது பெயர், இன்னும் அந்த நோயுடன் இணைத்தே பேசப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்படுகின்ற தீவிர வேட்டை இன்றைக்கும் நீடிக்கிறது. தனிமைப்படுத்தலைப் வெற்றிகரமாக அமல்படுத்தும் ஆவலில், நோயாளியின் பெயர்களையும் முகவரிகளையும் அரசாங்கங்கள் வெளியிடுகின்றன. நோயாளிகளின் வீட்டு கதவுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.  அழியாத மை கொண்டு தோலில் முத்திரையிடப்படுகின்றது. இவை அனைத்தும் மருத்துவ நெறிமுறைகளை மீறுகின்றன செயல்களாகும். இதுபோன்ற செயல்கள் சமூக ஒடுக்குமுறைக்கே வழிவகுக்கும்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு ஏழை, புலம்பெயர்ந்த பெண் இந்த சமூகத்திடம் கேட்ட அதே கேள்வியை நாம் இன்றைக்கும் எதிர்கொள்கிறோம். மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக, மனிதகுலத்தை கைவிடுவது அவசியம்தானா?

அமிதங்சு  ஆச்சார்யா

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் லெவர்ஹுல்ம் டிரஸ்ட் பி.எச்.டி ஆய்வாளர் மற்றும் ஆஸ்திரியாவின்  கொன்ராட்  லோரென்ஸ்  நிறுவனத்தில் உறுப்பினர்.

https://www.thehindu.com/society/pandemics-and-prejudice-when-there-is-an-epidemic-social-prejudices-resurface/article31246102.ece

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

;