tamilnadu

img

தலைவராக மலர்ந்த இளைஞர் பி.சி.ஜோஷி - முசாபர் அகமது

1927-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே பம்பாயிலும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டு விட்டது. எஸ்.எஸ்.மிராஜ்கர். கட்சியின் செயலாளராக இருந்தார். அந்த ஆண்டில் நடந்த அகில இந்தியத் தொழிற்சங்க மாநாட்டில் பஞ்சாப்பைச் சேர்ந்த சோகன்சிங்ஜோஷ், பாக்சிங் கனேடியன் ஆகியோருடன் எங்களுக்கு ஆரம்பப்பழக்கம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சோகன்சிங் ‘கீர்த்தி’ என்ற ஒரு மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார். குருமுகி லிபியில் பஞ்சாபி மொழியில் அந்த இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. மாஸ்கோவில் உள்ள ‘கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக’ கத்திலிருந்து திரும்பி வந்த சந்தோக்சிக் என்பவர் இந்த இதழின் ஸ்தாபகர். அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு இறுதியில் அந்த நோயினாலேயே மரணம் அடைந்தார். அவருடனோ அப்துல் மஜீத்துடனோ எங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. 1924-ல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர் லாகூரில் தம்முடைய பணியை ஆரம்பித்தார். பஞ்சாபில் பிரபல நவஜவான்பாரத்சபையின் ஸ்தாபகர்களாக இருந்த மிகச்சிலருள் ஒருவராக அப்துல்மஜீத் இருந்தார். சோகன் சிங்குடன் நாங்கள் சில விவாதங்கள் நடத்தினோம். சம்பந்தப்பட்ட விவாதங்களின் பலனாக 1927-ல் பஞ்சாபில் கீர்த்தி - கிஸான் எனும் கட்சி உருவாக்கப்பட்டது. பஞ்சாபிலும் தொழிற்சங்கப் பணிகள் பரவிக் கொண்டிருந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லையல்லவா?
விவசாயிகள்  - தொழிலாளர்கள் கட்சி
 மீரத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதையொட்டி நானும் பிலிப் ஸ்ப்ராட்டும் 1928 அக்டோபரில் மாநாட்டுக்குச் சென்றோம். அப்துல்மஜீத், சோகன்சிங்ஜோஷ், பூரணசந்திரஜோஷி (பி.சி.ஜோஷி) ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். எம்.ஏ.பட்டம் பெற்ற பிறகு அச்சமயத்தில் அலகாபாத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பி.சி.ஜோஷி படித்துக் கொண்டிருந்தார். கடிதங்கள் மூலம் அவருடன் தொடர்பு கொள்ள என்னால் முடிந்தது. மீரத் மாநாட்டில் தான் நான் அவரை முதன்முதலில் கண்டேன். மீரத் மாநாட்டில் உத்தரப்பிரதேசத்திற்கும் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக பி.சி.ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாட்டைக் கல்கத்தாவில் நடத்தவேண்டுமெனவும், பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் கட்சிகளை ஒன்றுசேர்த்து ஓர் அகில இந்திய தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியை உருவாக்க வேண்டுமெனவும் - மாநாடு நடப்பதற்கு முன்னரே நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதற்குப் பின்னர் மாநாடு நடத்தி, அகில இந்தியக் கட்சி உருவாக்கப்பட்டது. சோகன் சிங்ஜோஷ் மாநாட்டின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்கமிட்டி இரண்டு முறைகள் கூடியது. ஒரு கூட்டம் மாநாடு நடந்து கொண்டிருந்த போது நடந்தது. மற்றொரு கூட்டம் 1929 ஜனவரியின் ஆரம்பத்தில் - அதாவது மாநாட்டின் கடைசியில் கூடியது. இரண்டாவது கூட்டத்தில் எனது பரிந்துரையின் பேரில் பி.சி.ஜோஷியும், சோகன் சிங்ஜோஷும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர் மத்தியிலிருந்து முதலாவதாக அதிகாரப் பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர் சோகன்சிங் ஜோஷ்தான். சந்தோக்சிங்கை கட்சியின் உறுப்பினராக மதிப்பிடுவதென்றால் சோகன்சிங்குக்கு இரண்டாவது இடம்தான் கிடைக்கும். பி.சி.ஜோஷியின் பெயரை ஓரிடத்திலும் எழுதக்கூடாதென்று தீர்மானிக்கப்பட்டது. 1927- 28-ல் குறிப்பாக 1928-ல் நடந்த தொழிலாளர் போராட்டத்திற்குப்பிறகு அடக்குமுறையின் ஆபத்து உருவாகுமென்பது எங்களுக்கு தோன்றியது. அதனால் இளைஞரான பி.சி.ஜோஷியைப் பாதுகாப்பதற்காக அவரைப் பொறுத்தளவில் முதலில் சொல்லப்பட்டவாறு தீர்மானித்தோம். ஆனால் நாங்கள் எண்ணியவாறு அவரைப்பாதுகாக்க முடியவில்லை. கல்கத்தாவில் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியின் மாநாடு நடந்துகொண்டிருந்தபோது, தோழர் கங்காதர் அதிகாரி ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். ஆறு ஆண்டு காலம் வரை அவர் ஜெர்மனியிலிருந்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் பௌதீக இராசயனத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றபின் டாக்டர் அதிகாரி, கொஞ்சகாலம் அங்கு பணிசெய்தார். அவர் ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததால் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவரை உறுப்பினராக சேர்த்துக்கொண்டோம். மத்தியக்கமிட்டி தான் இதற்கான முடிவு செய்தது. அதுவரை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் அகிலத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. நாங்கள் விரும்பியிருந்தால் அது நடந்திருக்கும். கட்சி உறுப்பினர்கள் மிகக் குறைவானவர்களாக இருந்ததால் நாங்கள் அதற்குத் திட்டமிடவேயில்லை. எனினும் கம்யூனிஸ்ட் அகிலமானது தனது ஓர் அங்கம் என்ற நிலையில் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸின் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை நிர்வாகக் குழுவுக்கு மாற்றுப் பிரதிநிதிகளாத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்தோம். எங்களது மத்தியக் கமிட்டிக் கூட்டமும் இந்தப் பிரச்சனை குறித்து விவாதித்து இந்தப்பிரதிநிதிகள் இருவரில் ஒருவரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழுவுக்கு அனுப்புவதென மத்தியக்கமிட்டி முடிவு செய்தது. ஆனால் இதைச் செய்வதற்கு முன்பே மீரத் சம்பவங்கள் எங்கள் மீது வந்து விழுந்தன.  
கம்யூனிஸ்ட் அகிலத்தின் விமர்சனம்
தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியின் மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழு ஒரு செய்தி அனுப்பியது. மாநாட்டின் ஆரம்பத்தில் இந்தச்செய்தி எங்களுக்குக் கிடைத்தது. செய்தியின் ஆரம்பத்திலேயே தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதி அல்லவென்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இரண்டு வர்க்கங்களின் அடிப்படையில் ஒரு கட்சியை உருவாக்குவதற்கு எதிரான விமர்சனமும் அதில் இருந்தது. அதனால் ஒரே வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டியதிருந்தது. அந்தச் சமயத்தில் இது குறித்து ஏதாவது விவாதிப்பதற்கு எங்களால் முடியவில்லை. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் அப்போதுதான் நடந்து முடிந்து விட்டிருந்தது. எனினும் தனிப்பட்ட அளவில் எங்களில் பெரும்பாலானவர்க்கும் இந்த விமர்சனத்தின் பிரதான  உள்ளடக்கம் என்னவென்பது புரிந்தது.

;