tamilnadu

img

ஒடிசா - மாநில அரசின் மக்களை மையப்படுத்திய திட்டம்

ஒடிசா மாநில அரசின் உயர்மட்டக்குழு மக்களின் பங்கேற்புடன் கோவிட் 19 சமூகப்  பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியைத் தொடர்கிறது.இத்துடன் கிராமப்புற பொருளாதாரத்தையும் மீண்டும் முடுக்கி விடுவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.கடந்த மூன்றரை மாத காலமாக கோவிட் 19 க்கு எதிரான போராட்டத்தில்  கொரோனா வைரஸ்பற்றிய விழிப்புணர்வை அரசு  மக்களிடம் இடையறாது ஏற்படுத்தி வருகிறது.வைரஸ் சமூகப் பரவலைத் தவிர்க்க அரசின் ஒரு விழிப்புணர்வு விளம்பரம் இது:

“கொரோனாவை வரவேற்க வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டீர்களா?”.

இயற்கை பேரிடர்களைச் சந்தித்த அனுபவத் தொகுப்பு
கடந்த காலங்களில் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்தித்த அனுபவத்துடன் ஒடிசா மக்கள் இந்த மருத்துவப் பேரிடரையும் மிகவும் நிதானமாக பதட்டமின்றி எதிர்கொள்கின்றனர்.கொள்ளை நோய் முன்வைத்துள்ள சவாலை எதிர்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளையும் பின்பற்றுமாறு மக்களை மாநில முதல்வர் நவீன்பட்நாயக் கேட்டுக் கொண்டார்.ஒரியர்கள் அவரின் பின்னால் அணிதிரண்டு ஆதரவளித்தனர்.கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனையோ கடுமையான புயல்களையும், வெள்ளங்களை யும்  எவ்வாறு சந்தித்தார்களோ அவ்வாறே கொள்ளை நோயையும் அரசின் பல்வேறு துறைகளின் உதவியுடன் மக்கள் மன உறுதியுடன்  எதிர்கொண்டு வருகின்றனர். 

மையப்படுத்துதல் + சமுதாயக் குழுக்களின் பங்கேற்பு
நிலைமையை ஆய்வு செய்ய முதல்வர் தொடர்ச்சியாக அரசு உயர்மட்ட அளவிலான காணொலி ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார். அவ்வப்போது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு  மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதற்கு சமுதாயக் குழுக்கள் முழுமையாக ஒத்துழைக்கின்றன.

ஆம்பன் புயல்
கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்போதே மே மாதத்தில் வீசிய கடும் ஆம்பன் புயலைவையும் மக்கள் ஒத்துழைப்புடன்  சமாளித்தது மாநில அரசு. ஏற்கனவே, கிராம ஊராட்சிகளில் அமைக்கப் பட்டிருந்த கொரோனா தனிமைப் படுத்தும் முகாம்கள் “புயல் பாதுகாப்பு இல்லமாக” மாற்றப்பட்டன.கடலோர மாவட்டங்களை ஆம்பன் புயல் தாக்கும் முன்பாக பிரசவ நாள் நெருங்கிக் கொண்டிருந்த 1855 கர்ப்பிணிகள் பாதுகாப்பான அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.
நாடடங்கு காலத்தில் எட்டு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் ஒடிசாவுக்குதிரும்பினர். அவர்களில் ஏழு லட்சம் பேர்  தனிமைப் படுத்தும் முகாம்களில் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். இதற்காக  ஏற்கனவே 6798 கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்கள் மேலும் அதிகரிக்கப்பட்டன. தற்போது தேவைப்படாத முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன.

கொரோனா பரிசோதனைகளில் வைரஸ்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஜுன் மூன்றாவது வாரத்தில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6500 ஆக இருந்தது.அவர்களில் 4500 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். 25 பேர் உயிரிழந்தனர்.ஜுலை மாதத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளதைக் கருத்தில் கொண்டு “கோவிட் பராமரிப்பு இல்லம்” அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் 12 பேர் வரை தங்க வைக்க முடியும்.சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர் வட்டார அளவில் உள்ள மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப் படுவர்.கோவிட் 19 மேலாண்மையில் ஒரிசாவின் சிறப்பம்சம் ஆதாரவளங்களை பரவல்மயப் படுத்தியதாகும்.கிராம, நகர்ப்புறங்களில் வார்டுகள் தோறும் கொரோனா  கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்பஞ்ச் வார்டு உறுப்பினர்கள் தனிமைப்படுத்தல் முகாம்கள்,குணமடைந்தோர், சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர் ஆகிய அனைத்தையும் கண்காணிப்பு செய்து உதவி செய்வார்கள்.லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொற்று பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கு மக்களும் ஒத்துழைக்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டம்
மீண்டும் திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களால் மாநிலத்தின் சூழல் மாறியுள்ளது.  அவர்கள்  தாங்கள் பணிசெய்த மாநிலங்களுக்கு இப்போதைக்கு திரும்பவும் செல்வதற்கான சாத்தியமில்லை. சிலர் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சிலருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், பெரும்பகுதி யினர் வேலையின்றி இருக்கின்றனர். இவர்களுக்கென “வள ஆதார வரைபடம்” (skill mapping) தயாரித்து, ஏராளமானவர்களுக்கு வேலை வழங்க கிராமப் புற அளவில் சிறு தொழில்களை தொடங்க வேண்டுமென்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.அதிகாரங்களையும், ஆதார வளங்களையும் குவித்து மையப்படுத்தும் போக்கு அதிகரித்து வரும் இன்றைய நிலையில், முந்தைய இயற்கைப் பேரிடர்களைக் கையாண்ட அனுபவத்தால் வைரஸ் தொற்று நோய்க்கும் எதிரானப் போராட்டத்தை  வருமுன்னர் உணர்ந்து செயல்படுதல்- ஒடிசாவின் தனித் தன்மையான மக்கள், ஊராட்சிகள் மற்றும் மக்கள் பங்கேற்புடனான செயல்பாடுகளுடன், மாநில அரசு தனது மையப்படுத்திய அணுகுமுறையையும் இணைத்துக் கொண்டு செயல்படுவது- ஆகிய அனுபவங்கள் மற்ற மாநிலங்களுக்கான முன்மாதிரியாகும்.

ஃபிரண்ட்லைன் ஜூலை 17,2020 இதழில்.... 
பிரபுல்ல தாஸ் கட்டுரையிலிருந்து...
- தொகுப்பு :  ம.கதிரேசன்

;