tamilnadu

img

ஊடகவியலாளர்கள் மீது ஏனிந்த வன்மப் பாய்ச்சல்? - அ.குமரேசன்

முன்பு, தங்களால் எதிர்வாதம் வைக்க முடியாத அளவுக்கு ஆணித்தரமான கருத்துகளைக் கூறுவோரை விவாதங்களுக்கு அழைக்கக்கூடாது என்று தொலைக்காட்சி நிறுவனங்களை நிர்ப்பந்திக்க முயன்றார்கள். இப்போது ஊடக ஊழியர்களையே பணியில் தொடர அனுமதிக்கக்கூடாது என்று நிர்ப்பந்திக்க முயல்கிறார்கள்.

முதலில் மத்திய ஆட்சியாளர்களின் “சாதனை கள்” என்று காட்டுகிற புள்ளிவிவரங்களைப் பரப்பினார்கள். தமிழக மக்கள் நம்பவில்லை என்று தெரிந்ததும் எதிர்க்கட்சிகளைத் தாக்குகிற கருத்துகளைப் போட்டார்கள். அதற்கும் வேண்டிய பலன் கிடைக்கவில்லை. ஏன் என்று பார்த்தார்கள். ஊடகங்களில் வெளியாகிற உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும், ஊடக விவாதங்களில் வெளிப்படுகிற கூர்மையான விமர்சனங்களையும் மக்கள் கவனிப்பதுதான் காரணம் என்பதாகக் கண்டுபிடித்தார்கள். இப்போது அந்தச் செய்தி களைத் தருகிற, விமர்சனங்களை முன்வைக்கிற ஊடக ஊழியர்களைத் தாக்குதல் இலக்காக்கியிருக்கிறார்கள்.

ஊடகங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. ஊடகவியலாளர்கள் விமர்சிக்கப்படக் கூடாதவர்கள் அல்ல. கருத்துகளைக் கூற ஊடகங்களுக்கும் ஊடகவிய லாளர்களுக்கும் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதில் ஒரு சதவீதம் கூடக் குறையாத அளவுக்கு அவற்றை விமர்சிக்கிற உரிமை எவருக்கும் இருக்கிறது.

ஆனால் கருத்துகளைத் தாக்குவதற்கு மாறாக, கருத்துக் கூறுகிறவர்களைத் தாக்குவதற்கான உரிமை, அதுவும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கான உரிமை, குடும்பத்தினரை வம்புக்கு இழுக்கிற உரிமை எவருக்கும் இல்லை. அப்படித் தாக்குவது பண்பாடும் இல்லை. கலாச்சாரக் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்கிறவர்களோ இந்தப் பண்பாட்டை மதிப்பதில்லை. தெருவில் அற்பக்காரணத்துக்காகச் சண்டைபோட்டுக்கொள்கிறவர்களில், பலவீனமான நிலையில் இருப்பவர்கள் திடீரென எதிராளியின் குடும்பத்தி னர் மீது வசைச்சேறு வீசுவார்கள். அப்படித்தான் இவர்க ளும் வசைச்சேற்றைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

தங்களுடைய நோக்கங்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் யார் யார் என்று பட்டியல் போட்டார்கள். அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்போரின் குடும்பப் பின்ன ணியைப் “புலனாய்வு” செய்தார்கள். ஒருவர் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவரின் மருமகன், இன்னொருவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவரின் உறவினர் என்றெல்லாம் கண்டு பிடித்தார்கள். வேடிக்கை என்னவென்றால், இந்தக் கண்டு பிடிப்புகள் பலருக்கும் ஏற்கெனவே தெரிந்தவை!

இந்தப் புலனாய்வில் எந்த அளவுக்குப் போனார்க ளென்றால், ஒரு ஊடகவியலாளரின் மனைவி இன்னொரு பெண்ணோடு ஊர் சுற்றுகிறார் என்றும், அந்தப் பெண் ஒரு இயக்கத்தோடு தொடர்புடையவர் என்றும் “அம்பலப்படுத்தினார்கள்”. இதிலேயும் வேடிக்கை என்ன வென்றால் அந்தப் பெண்ணின் மகன்தான் அந்த ஊடக வியலாளர்! அவருடைய மனைவி தனது மாமியாருடன் வெளியே சென்றுவருவதில் என்னப்பா குற்றத்தைக் கண்டுபிடித்தீர்கள் என்று எழுந்த கேள்விகளால் இவர்க ளின் வெறுமைதான் இப்போது அம்பலப்பட்டு நிற்கிறது.

இவர்களின் கலாச்சாரம் என்ன செய்ய வைத்த தென்றால், அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்கள் என்று கண்டு பிடித்து, அதன் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி னார்கள். இவர்களுக்கெல்லாம் இந்தப் பின்னணிகள் இருக்கின்றன, அதனால்தான் எதிர்க்கட்சிகளின் கருத்து களை எதிரொலிக்கிறார்கள், ஆகவே இவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று “கேட்டுக்கொண்டார்கள்”. ஒரு நிறுவனம் யாரைப் பணியில் வைத்துக்கொள்வது, யாரை வெளியேற்றுவது என்று கட்டளையிடும் துணிவு எந்த அதிகாரத்திலிருந்து வந்தது?

அதிலேயும் ஒரு வேடிக்கை என்னவென்றால், நிறுவனத்திற்கு அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களில் சிலர் தற்போது அங்கே வேலையிலேயே இல்லை! அவர்க ளை எப்படிப் பணி நீக்கம் செய்வது என்ற குழப்பத்தை நிர்வா கத்திற்கு ஏற்படுத்திவிட்டார்கள் இந்தப் புலனாய்வாளர்கள்! 

செய்தியைச் செய்தியாகச் சொல்வதுதானே ஊடகவியலாளர் வேலை, அதிலே தங்கள் கருத்தை எப்படித் திணிக்கலாம் என்று ஒரு வாதத்தைக் கிளப்புகிறார்கள். செய்தி வேறு, விவாதம் வேறு. செய்தி நேரத்தில் செய்தி யாகச் சொல்வதற்கும், விவாத நேரத்தில் கருத்தாகச் சொல்வதற்கும் உள்ள வேறுபாடு கூட புரியவில்லையா என்று கேட்கலாம்தான், ஆனால் அதெல்லாம் புரியாத வர்கள் அல்ல இவர்கள்.

தீவிர வலதுசாரி ஒருவர் தனது சமூக ஊடகப் பதிவில், பத்திரிகையாளர் சங்கம் ஒன்றைக் குறிப்பிட்டு, அதிலே இருப்பவர்கள் மற்றொரு அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்று தெரியவருவதாகவும், அவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அந்த மற்றொரு அமைப்பு ‘யூ டியூப்’ காணொலித்தள நிகழ்ச்சிகள் மூலம் பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகளைக் கூறி வருவதாகும். அவர்களுடைய கருத்துகளில் மட்டு மல்லாமல், அவர்களுடைய சித்தரிப்பு முறைகளில் கூட மாறுபாடு கொள்ளலாம், விமர்சிக்கலாம். ஆனால், பத்திரி கையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிலேயும் பங்கேற்பதில் விசாரிக்க என்ன இருக்கிறது? இதுவும் புரியாதவர்கள் அல்ல இவர்கள்.

இதெல்லாம் புரிந்தும் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? ‘கரகாட்டம்’ சினிமாவில் சிக்கல் சண்முகசுந்தரம் போல நாதசுரம் வாசிப்பதாகச் சொல்லச்சொல்லி, “ஒரு வௌம்ப ரம்” என்று செந்தில் சொல்கிற காட்சியை நினைத்துக் கொள்க. அப்படியொரு விளம்பரம் தேடுகிற மலிவான முயற்சி இதிலே இருக்கிறது. அதைவிட, தமிழ்நாட்டில் நாங்கள் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் என்று யாருக்கோ காட்டிக்கொள்கிற ஏற்பாடும் இருக்கிறது.

ஊடகவியலாளர்கள் தங்களுக்கென்று சித்தாந்தமோ, அரசியல் கொள்கையோ கொண்டிருக்கக்கூடாது, சமூக அக்கறையோடு செயல்படக்கூடாது என்று கட்டுப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. அந்தச் சித்தாதங்க ளையும் கொள்கைகளையும் விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது என்ற தடையும் எவருக்கும் இல்லை. ஆனால், ஊடகவியலாளர்களுக்கென்று சித்தாந்தமோ, கொள்கை யோ, சமூகச் சிந்தனையோ இருக்கக்கூடாது என்று கட்டுப்படுத்த முயல்கிறவர்கள் யார் தெரிகிறதா? மத்திய ஆளுங்கட்சியை இயக்கும் சித்தாந்தத்தை, அரசின் கொள்கைகளை, நடவடிக்கைகளை ஆதரித்துக் கருத்துக் கூறுகிறவர்களுக்கும், விவாதங்களில் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துவோரைப் பேசவிடாமல் தடுக்கிறவர்க ளுக்கும் “நடுநிலையான” ஊடகவியலாளர்கள் என்று சான்றிதழ் வழங்குகிறவர்கள் இவர்கள்.

முன்பு, தங்களால் எதிர்வாதம் வைக்க முடியாத அளவுக்கு ஆணித்தரமான கருத்துகளைக் கூறுவோரை விவாதங்களுக்கு அழைக்கக்கூடாது என்று தொலைக் காட்சி நிறுவனங்களை நிர்ப்பந்திக்க முயன்றார்கள். இப்போது ஊடக ஊழியர்களையே பணியில் தொடர அனுமதிக்கக்கூடாது என்று நிர்ப்பந்திக்க முயல்கிறார்கள். விவாதங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், வலதுசாரி சிந்தனையாளர், சமூக ஆர்வலர் என்று இவர்களுடைய பிரதிநிதித்துவத்துக்குத்தான் கூடுதல் இடமும் நேரமும் தரப்படுவதே உண்மை. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த முடியாததற்கு யாரைப் பழிவாங்குவது?

தமிழ்நாட்டில் இந்த உத்திகளைக் கையாளும் கட்டா யம் இவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? தமிழ் மண்ணின் முற்போக்கு மரபைச் சகித்துக்கொள்ள முடியாத இயலா மையிலிருந்து வந்த கட்டாயம் அது. அந்த மரபல்லவா, அகில இந்திய அளவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விதமாக இருக்க, தமிழகத்தில் மட்டும் வேறு விதமாக வர வைத்தது? அந்த மரபல்லவா மதவெறி அரசியலை இங்கே வேரூன்றவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது? அந்த மரபல்லவா தமிழகத்தில் கணிசமான அளவுக்கு ஊடகவியலாளர்களிடையேயும் பிரதிபலிக்கிறது? முற்போக்குத் தமிழ் மரபின் மீதான ஆத்திரம்தான் ஊடக வியலாளர்களுக்கு எதிராகப் பட்டியல் தயாரித்து மின்னஞ்சல் அனுப்ப வைத்திருக்கிறது.

தமிழ் மக்கள் தங்கள் மரபையும் பாதுகாப்பார்கள், அதிலிருந்து மலர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் துணை யாக நிற்பார்கள்.

 

;