tamilnadu

img

ஜிஎஸ்டி பாக்கி ரூ.47 ஆயிரம் கோடியை ‘ஏப்பம் விடும் பாஜக’ அரசு... எடப்பாடி அரசு மவுனம்

மாநில அரசின் வருவாய் பிரிவு - மார்ச் 2018 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான ரூ.3,984.52 கோடி மதிப்பிலான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் செயலாக்க தணிக்கை அறிக்கை நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் (மத்திய அரசு வழங்கியது உட்பட) ரூ.1,46,280 கோடியாகும். இதில் மாநில வரி வருவாய் ரூ.93,737 கோடி. வரி அல்லாத வருவாய் ரூ. 10,764 கோடியாகும். மொத்தம்ரூ.1,04,500  கோடியாகும். இவற்றில் விற்பனை, சரக்குகள்மற்றும் சேவை வரி ரூ.70,945 கோடி. வட்டி வரவு, ஆதாயப் பங்குகள், ஆதாயம் ரூ.5,357.15 கோடியாகும்.

உள்ளதும் பறிபோனது!
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2013-14 மத்தியஅரசின் வரி வருவாயிலிருந்து மாநிலத்தின் பங்கும், மானிய உதவிகளும் என தமிழ்நாட்டிற்கு 77 விழுக்காடு வழங்கப்பட்டது.ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், 2014-15 ஆம் ஆண்டில்6 விழுக்காட்டை குறைத்து 71 விழுக்காடு மட்டுமே வழங்கியபாஜகவின் மோடி அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தத்தொகையை 69, 68 விழுக்காடாக குறைத்துவிட்டது. இதனால், மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலத்தின் பங்காக 2017-18 ஆம் ஆண்டில் ரூ.27,099.71 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மானிய உதவிகள்ரூ.14,679.44 கோடி மட்டும் கிடைத்துள்ளது.2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு கொண்டு வந்ததால் அதனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு நிதி வழங்கும் என்று உத்தரவாதம் அளித்தது. ஆனால்,2017-2018ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து வசூல் செய்யப்பட்ட ரூ.62,612 கோடியில் ரூ.6,466 கோடியை மத்திய அரசு தன்னிடமே வைத்துக் கொண்டது. 2018-2019ஆம் நிதியாண்டில் வசூல் செய்த 95 ஆயிரத்து 81 கோடி ரூபாயில்40 ஆயிரத்து 806 கோடி ரூபாயை தன்னிடமே வைத்துக்கொண்டது. இதன் மூலம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை மோடி அரசு வேறு பணிகளுக்கு மடை மாற்றம் செய்து தமிழகத்தை வஞ்சித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய எடப்பாடி அரசு ‘பெட்டிப் பாம்பாக’அடங்கிவிட்டதை சிஏஜி அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி யிருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி வசூல் செய்வதிலும் பெரும்முதலாளிகள், பெரும் தொழிலதிபர்களிடம் அதிகாரிகள் ‘கூட்டு’ வைத்துக் கொண்டு வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதையும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கொள்ளைக்காகவே வராத கொள்கை
தமிழ்நாட்டில் லிக்னைட், கிரைனைட், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற தாதுக்களும், கனிமங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதுமட்டுமன்றி கார்னட், டைட்டானியம், சில்லிமனைட் போன்ற அரிய கனிமங்களின் படிவுகளும் நிறைந்து காணப்படுகிறது.எஃகு வார்ப்பிரும்பு மற்றும் அதன் வலிமையை அதிகப்படுத்தும் வளைக்க முடியாத உலோகமாகவும், அரிப்பு தன்மையை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படும் மாலிப்டினம் தமிழ்நாட்டில் 52 விழுக்காடு கிடைக்கிறது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளது.இந்த வாய்ப்புகளை மேலும் அறிவதற்கும், மணல், சவுடு மண், கல்குவாரி, கிரானைட் குவாரிகள் ஏலம் விடுவதில் விதிகள் மீறல், முறைகேடு, அனுமதித்த அளவை விட பல மடங்கு அதிகமாக சுரண்டியது, குத்தகை காலம்முடிந்தும் புதுப்பிக்காமல் இருப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கண்காணித்து முறைப்படுத்த ‘மாநில கனிம கொள்கை’ அவசியமாகிறது என்பதைபலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் தணிக்கை அறிக்கை குற்றம்சாட்டுகிறது.அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா அனைத்தும் கனிமவள கொள்கையை உருவாக்கிவிட்டன.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்தக் கொள்கை உருவாக்கப்படவில்லை. இதன் விளைவு, மத்திய அரசின் கொள்கை மாற்றத்தால் பெரும் கனிமங்களின் சுரங்க ஆய்வு குறைந்துவிட்டது. சிறு கனிமங்களின் மேலாண்மை மட்டுமே தொடர்ந்து வருவதால் கனிம,இயற்கை வளங்களை மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்கள் இஷ்டம்போல் கொள்ளை அடிப்பதற்கு மேலும் வழிவகுத்துவிட்டதையும், இதற்கு அதிகாரிகளே துணை போவதும் அம்பலமாகியுள்ளது. ரூ.329 கோடியை வசூலிக்க தவறிவிட்டதையும் வெளிப்படுத்தியுள்ளது.

===சி.ஸ்ரீராமுலு==

;