புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், உத்தரகாண்ட் மாநிலத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூனின் புறநகர் பகுதியில் உள்ள சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன். இவர் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை, அவருக்கு சொந்தமான வயலுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பங்கஜ் குமார் தலைமையிலான காவலர்கள் மாட்டுவண்டியை பார்த்ததும் தங்கள் வாகனத்தை நிறுத்தினர். வண்டியின் அருகில் யாருமில்லாததால், அந்த பகுதியில் இருந்தவர்களிடம், வண்டி குறித்து விசாரித்துள்ளனர். அவர்கள் கூறியதையடுத்து, ரியாஸ் வீட்டுக்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று, 1000 ரூபாய்க்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி ரசீதை கொடுத்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த ரியாஸ், ”வண்டியை என் வயலுக்கு வெளியில்தான் நிறுத்தி வைத்திருந்தேன். இதற்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது? மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டுவண்டி வராதபோது அதற்கு ஏன் அபராதம்?” என்று கேள்வி எழுப்பிய நிலையில், அப்போது அவர்கள் அந்த மாட்டு வண்டியை, மணல் கடத்தும் வண்டி என நினைத்ததாகவும், பில் புக் மாறியதாலும் தவறு நடந்துவிட்டதாகக் கூறி ரசீதை ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம், பொதுமக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.