tamilnadu

img

மாபெரும் தூணாக உயர்ந்து நிற்கிறார் தஹில் ரமணி - ஆர்.வைகை, அன்னா மேத்யூ, எஸ்.தேவிகா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே.தஹில் ரமணியை, இங்கிருந்து மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தது அதிர்ச்சியளிப்பதாகவும், இசைவு தெரிவிக்க முடியாததாகவும் உள்ளது. நீதிபதி தஹில் ரமணி, 75க்கும் மேற்பட்ட நீதிபதிகளுக்கு தலைமை வகித்துக் கொண்டிருப்பவர்; அது மட்டுமல்லாமல் 32 மாவட்டங்களின் நீதித்துறையை நிர்வகித்துக் கொண்டிருப்பவர்; புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்த்து கவனித்துக் கொண்டிருப்பவர். இதற்கு முரணாக, 3 நீதிபதிகளும் 7 மாவட்ட நீதிமன்றங்களும் மட்டுமே கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றில் தலைமை நீதிபதியாக இருப்பவரை, நாட்டின் மிகச்சிறிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வது என்பது, அவரது பதவியை கீழே இறக்குவது என்பதே ஆகும்; ஒரு மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அதிகாரியை பதவிக் குறைப்பு செய்வதன் மூலம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சல் உணர்வை உருவாக்குவதே ஆகும். இத்தகைய சூழலை அவர் தீர்மானகரமாக எதிர்கொண்டிருக்கிறார்; தனது பதவியை அவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்திருக்கிறார்.

இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு நீதிபதி ஜெயந்த் படேல் இதேபோன்று செய்தார். அவர், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது; எனினும் திடீரென்று அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு இசைவு தெரிவிக்காமல் அவர் பதவியை ராஜினாமா செய்தார். நீதிபதி ஜெயந்த் படேல், அந்த சமயத்தில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். இஸ்ரத் ஜகான் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த அமர்வில் ஒரு உறுப்பினராக இருந்த அவர், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

உயர்பதவியும் பாதுகாப்பற்றதுதானா?

அரசியலமைப்பு சட்ட ரீதியாக பாதுகாப்புகளைப் பெற்றிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி என்பதே கூட பாதுகாப்பற்றதுதானா? ஆம் என்றால், இந்தக் கட்டமைப்பில் ஏதோ அழுகிப்போய் இருக்கிறது என்றுதான் அர்த்தம். உச்சநீதிமன்றமானது நீதிபதிகளை தேர்வு செய்யவும் நியமனம் செய்யவும் இடமாற்றம் செய்யவுமான அதிகாரத்தை, மூன்று நீதிபதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளிலிருந்து பெறுகிறது. 1975 அவசரநிலைக் காலத்தின்போது மத்திய அரசு நீதிபதிகளை தான்தோன்றித்தனமாக, “தண்டனை இடமாற்றங்களின்” மூலம் பந்தாடிய சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில், நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்திய நீதித்துறையானது தனது அதிகாரங்களை தானே உறுதி செய்தது. இப்படித்தான், கொலிஜியம் முறை என்பது உருவானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உச்சநீதிமன்றத்தின் நான்கு மிக மூத்த நீதிபதிகள் கொண்ட ‘மூத்த நீதிபதிகள் குழு’ (கொலிஜியம்) என்பது உருவாக்கப்பட்டு செயல்படத் துவங்கியது. எனினும், நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் என்பது முழுமையானதோ அல்லது கேள்வி கேட்க முடியாததோ அல்ல; இத்தகைய இடமாற்றம் என்பது நீதி பரிபாலன நிர்வாகத்தை சிறந்த முறையில் பொதுமக்களின் நலனுக்காக மேம்படுத்தும் தேவைகளுக்கேற்பவே மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் பணியை மேம்படுத்தும் பொருட்டு ஒரு நீதிபதியின் இடமாற்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம்; அல்லது சம்பந்தப்பட்ட நீதிபதியின் மிக நெருங்கிய உறவினர்கள் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினால் அவரை இடமாற்றம் செய்யலாம். அதுமட்டுமல்ல, ஒரு நீதிபதி மீது பொதுநலன் சார்ந்த வழக்கு ஏதேனும் இருந்தாலோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அந்த நீதிபதிக்கு சொத்து தொடர்பான நலன்கள் இருந்தாலோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அந்த நீதிபதி மீது சர்ச்சைகள் ஏதேனும் எழுந்தாலோ, அதன் பேரில் அவர் அதே நீதிமன்றத்தில் தொடர்வது பொருத்தமானது அல்ல என்று கருதும் பட்சத்தில் உச்சநீதிமன்றம் அவரை இடமாற்றம் செய்யலாம்.

இங்கு நீதிபதி தஹில் ரமணி விசயத்தில் “நீதித்துறையின் சிறந்த நிர்வாக நலன் கருதி” அவர் இடமாற்றம் செய்யப்படுவதாக கொலிஜியத்தின் பரிந்துரையில் கூறப்பட்டிருக்கிறது; இதில் பொதுநலன் சார்ந்த அம்சம் எதுவும் இல்லை என்பது பளிச்சென்று தெரிகிறது. நீதிபதி தஹில் ரமணி, தனக்கு அளிக்கப்பட்ட உயரிய பொறுப்பினை சிறந்த முறையில் நிறைவேற்றி வருகிறார்; அவர் எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கவில்லை; அதேபோல தமிழ்நாட்டில் அவரது நெருங்கிய உறவினர்கள் யாரும் வழக்கறிஞர்களாக பணியாற்றவில்லை. கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட நீதிபதி நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக கடுமையான விமர்சனமும் கண்டனமும் கொலிஜியத்தின் செயல்பாட்டின் மீது எழுந்திருக்கிறது. 2011ம் ஆண்டு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரூமாபால், கொலிஜியத்தின் செயல்பாடு என்பது மிகவும் மர்மம் நிறைந்த, ரகசியம் சூழ்ந்த ஒன்றாகவே இருக்கிறது என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். பின்னர், 2015ல், அரசு ஒரு முயற்சி செய்தது. ‘தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம்’ அமைக்கலாம் என முன்மொழி ந்தது. இதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. தற்போது ள்ள கொலிஜியம் முறையே தொடரலாம் என்று கூறியது. 

இதில் கவனிக்க த்தக்கது என்ன வென்றால், தற்போது மேகாலயா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி ஏ.கே.மிட்டல், நீதிபதி தஹில் ரமணிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கு மாறு மாற்றம் செய்யப்பட்டு ள்ளார். இவர், மூத்த நீதிபதி என்ற போதிலும், 2018ல் இவரை விட ஜூனிய ரான நீதிபதி சூரியகா ந்த்தை, இமாச்சலப் பிரதேச உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் முடிவு செய்தது. பின்னர்தான் 2019 மே மாதம் நீதிபதி மிட்டல் மேகாலயா நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எனவே இப்போது, மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூன்று முறை பதவி வகித்தவருமான, மிக மூத்த நீதிபதிகளில் ஒருவராம் நீதிபதி தஹில் ரமணியை இடமாற்றி விட்டு அவரை நியமிப்பது, எந்தவிதத்திலும் பொருத்தமில்லாதது; நியாயப்படுத்த முடியாதது. அதுமட்டுமல்ல, நீதிபதி தஹில் ரமணியை விட ஜூனியரான நீதிபதி எஸ்.மணிக்குமார் தற்போது கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். ஜூனியரான ஒரு நீதிபதி அளவில் பெரிய கேரள உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் போது, மிக மூத்த நீதிபதியான தஹில் ரமணி மிக மிகச் சிறிய மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பது என்பது முற்றிலும் தன்னிச்சையானது பாரபட்சமானது. 

சமீப காலங்களில், சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கு, முத்தலாக் தொடர்பான வழக்கு போன்ற வழக்குகளில் நீதித்துறையின் தீர்ப்புகள் புகழ்மிக்கவையாக இருந்தபோதிலும், உச்சநீதிமன்றமானது, தனது சொந்த நிர்வாகத்திற்குள் அதே பெருமிதத்துடன் பெண்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. நாட்டிலேயே உயரிய மதிப்பீடுகளை பெற்ற ஒரு உயர்நீதிமன்ற பெண் நீதிபதியை பொருத்தமில்லாமல் இடமாற்றம் செய்வது என்பது, கொலிஜியம் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைக்கிறது.

வெளிப்படைத் தன்மை அவசியம்

இதில் எழுகிற முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த இடமாற்றம் தமிழக மக்களுக்கு நீதி வழங்குகிற நீதித்துறையின் நிர்வாகத்தில் எத்தகைய நன்மைகளை செய்துவிடப்போகிறது என்பதுதான். உச்சநீதிமன்றமானது தனது சொந்த நிர்வாகத்தை முறையாக ஒழுங்குபடுத்திக் கொள்ளாமல் அது நீதியின் மையமாக செயல்பட முடியாது. நீதி வழங்குவதிலும் நீதித்துறை நிர்வாகத்திலும் அதன் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் காரணமே இல்லாமல் அளிக்கப்பட்ட சட்ட விரோத நிர்வாக உத்தரவுகளை நீதிமன்றங்கள் நிறுத்தி வைத்த சம்பவங்கள் உண்டு. தற்போது உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் இத்தகைய நிர்வாக நடவடிக்கைகளுக்கும் இது பொருந்த வேண்டும். 

நீதிபதி தஹில் ரமணியின் இடமாற்றத்தைப் பொருத்தவரை சமூக ஊடகங்களிலும் நீதிமன்ற வளாகங்களிலும் ஒருவிதமான வதந்தி போன்ற கருத்துக்கள் உலா வருகின்றன. இதில் மர்மமான உண்மைகள் இருக்கிறதா என்ற பேச்சும் அடிபடுகிறது. 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் இனப் படுகொலை சம்பவங்களில் ஒன்றான பில்கிஸ்பானு வழக்கில் நீதிபதி தஹில் ரமணி அளித்த தீர்ப்புக்கு ஏற்பட்ட பின் விளைவு தான் இந்த இடமாற்றம் என்று சில ஊடகங்கள் எழுதியுள்ளன. உச்சநீதிமன்றத்தின் சில நீதிபதிகளது தனிப்பட்ட பொறாமையால் இந்த இடமாற்றம் நடந்திருக்கிறது என்றும் கூட யூகங்கள் வெளிப்படுகின்றன. இந்த வதந்திகள் தவறானவையாக இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.  இங்கே 2011ஆம் ஆண்டு நீதிபதி ரூமாபால் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளை குறிப்பிட வேண்டியுள்ளது. கொலிஜியத்தில் மேற்கொள்ளப்படும் நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட முடிவுகளில் ஆபத்தான விளைவுகள் கொண்ட கைமாறுகள் உண்டு; அவரவருக்கு விருப்பமான நபர்களை உயர் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான உந்துதலும் உண்டு; வெளியில் இருந்து தலையீடுகளும் உண்டு என்று நீதிபதி ரூமாபால் குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய நிகழ்வுகள், நீதிபதிகளின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கையை உலுக்கியது.

கொலிஜியத்தை தடுத்து நிறுத்துங்கள்

1977ஆம் ஆண்டு எஸ்.எச்.ஷேத் வழக்கில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கடுமையான எச்சரிக்கையோடு கூறினார்: “பொது அதிகாரம் என்பது மிகப்பெரிய அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானதாக செயல்படுத்தப்பட வேண்டும்; அதில் தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்த முடிவுகளோ அல்லது பொது நிர்பந்தங்களோ முடிவுகளை எடுப்பதற்கு - அந்த அதிகாரத்தை செயல்படுத்துவதற்கு காரணியாக இருக்குமானால், நீதிமன்றமானது அத்தகைய சட்டப்பூர்வமற்ற முடிவினை தயவு தாட்சண்யமின்றி ரத்து செய்ய வேண்டும்.” கொலிஜியம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம் அல்ல. அது நீதிமன்றம் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட ஏற்பாடு. ஆனாலும், கொலிஜியத்தின் முடிவுகள் பொருத்தமில்லாத முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று கேள்விக்குள்ளாக்கப்படும் போது அதை நிறுவனரீதியாக தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடு இல்லை. 

இத்தகைய பொதுவான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் போது, இதில் அரசியல் சாசன அதிகார அமைப்புகளே தலையிட முடியாமல் இருக்கும்போது, நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் துணிச்சலை வெளிப்படுத்திய ஒரு மாபெரும் தூணாக உயர்ந்து நிற்கிறார். இங்கே நீதிபதி எச்.ஆர். கன்னா அவர்களை நினைவு கூரவேண்டும். அவசர நிலைக் காலத்தின் போது ஏ.டி.எம் ஜபல் பூர் வழக்கு என்றொரு ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு வந்தது. அதில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பளிக்க அரசியல் நிர்பந்தம் அவர் மீது கடுமையாக செலுத்தப்பட்டது. அதற்கு பணியாமல் அவர் பதவியை ராஜினாமா செய்து தனது துணிச்சலை வெளிப்படுத்தினார்.  17 ஆண்டு காலம் நீதித்துறையில் நீதிபதியாக சேவையாற்றி, இன்னும் ஒரு வருட காலத்தில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஒரு நீதிபதியின் ராஜினாமா, இந்திய நீதித்துறைக் கட்டமைப்பு ஆரோக்கியமானதாக இல்லை என்பதை அம்பலப்படுத்துகிற ஒரு எச்சரிக்கை மணியே ஆகும்.

உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்ட ரீதியான பதவியை வகிக்கிறார்கள்; அது சார்ந்த பாதுகாப்பினை பெற்றிருக்கிறார்கள்; அத்தகைய நபர்கள் வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்படுகிற இலக்குகளாக மாற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்ற கொலிஜியம் மேற்கொள்கிற எந்த ஒரு தன்னிச்சையான இடமாற்றமும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவர்களது உதவியாளர்கள் போன்ற நிலைக்குத் தள்ளுகிறது. மேலும், இத்தகைய வெளிப்படைத் தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற கொலிஜியம் முறையானது பொதுமக்கள் நலனுக்கு சேவையாற்றும் விதத்தில் ஒரு அச்சமற்ற, வலுவான நீதித்துறையை கட்டமைப்பதில் அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது. 

தங்களுக்கு தாங்களே பொறுப்பாளிகளாக இருப்பவர்களுக்கு யார் பொறுப்பேற்பது?

நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 9.9.19

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
 

;