புதுதில்லி:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணியை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல் செய்த உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி அவர்களை உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் மாற்றல் செய்திருப்பது, மக்களில் கணிசமான பகுதியினர் மத்தியில் மிகவும் திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீதிபதி தஹில் ரமணி அவர்கள் தன் மாற்றல் உத்தரவை மறுபரிசீலனை செய்திட வேண்டும்என்று கோரியதை கொலிஜியம்நிராகரித்திருப்பது துரதிர்ஷ்டவ சமானதாகும்.பிரச்சனை என்பது மாற்றல் அல்ல. எனினும், இவர் வழக்கைப் பொறுத்தவரை, மிகவும் மூத்த தலைமை நீதிபதியான இவர், நாட்டின் நான்காவது மிகப்பெரிய உயர்நீதிமன்றம் ஒன்றிலிருந்து – 75 நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம் ஒன்றிலிருந்து – 4 லட்சத்து 2 ஆயிரத்து 855 வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு நீதிமன்றத்திலிருந்து, வெறும் 3 நீதிபதிகளேகொண்ட ஒரு உயர்நீதிமன்றத்திற்கு – வெறும் 1,086 வழக்குகளே நிலுவையில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டிருப்பதாகும். ஒரு மூத்த நீதிபதியை இவ்வளவு மோசமான முறையில் தரம் தாழ்த்தி இருப்பதற்கு கொலிஜியத்தால் பகுத்தறிவுடன் எவ்விதமான காரணத்தையும் அளித்திட முடியாது. அதேபோன்று மிகவும் இளையவரான மேகாலயா தலைமை நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியிருப்பதும் இதற்கிணையாக தான்தோன்றித்தனமானது (arbitrary) மற்றும் எவ்விதமான காரணமும் சொல்ல இயலாத ஒன்றேயாகும்.
நாட்டில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் இருவர்தான் பெண்கள். தில்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த கீதா மிட்டல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்குகளில், வரலாற்றுச்சிறப்பு மிக்க விதத்தில் தீர்ப்புகள் அளித்துள்ளார். அவருடைய காலத்தில்தான் இளம்சிறார் நீதிமன்றங்களில் விசாரணைகள் எளிமைப் படுத்தப்பட்டன. பின்னர் அவர் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதி மன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி முன்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.2002 குஜராத் கலவரங்களின்போது பில்கிஸ் பானோ கூட்டுவன்புணர்வு வழக்கில் அவர், கீழமைநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டதைத் தள்ளுபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்திருந்தார். இவ்விரு நிகழ்வுகளுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லாததுபோல் தோன்றினாலும், தங்கள் திறமையையும், நேர்மையையும் தெளிவாகஉயர்த்திப்பிடித்துள்ள மூத்த பெண் நீதிபதிகள் இவ்வாறு மாற்றல்கள்செய்யப்பட்டிருப்பது என்பது, பெண்நீதிபதிகள் ஏன் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் (arbitrary manner) பந்தாடப்படுகிறார்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.மேலும், தற்போது நீதிபதிகளின் மாற்றல் தொடர்பாகவும் நியமனங்கள் தொடர்பாகவும் எவ்விதமான வெளிப்படைத்தன்மையுமின்றி கொலிஜியம் பின்பற்றும் நடைமுறை பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி இருக்கின்றன. நீதித்துறையின் மீது நம்பகத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் இவை வெளிப்படைத்தன்மையுடன் அமைந்திட வேண்டும். அப்போதுதான் தேவையற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.
நீதிபதி விஜயா தஹில் ரமணி மாற்றல் உத்தரவு ரத்து செய்யப்படவேண்டும். அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தொடர்வதுதான், ஒரு மூத்த நீதிபதியின் உயர்புகழ், மதிப்பு மற்றும் நேர்மைக்கு அளித்திடும் மரியாதையாக அமைந்திடும். நீதிமன்றங்கள் என்பவை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு பரிகாரம் காணும் மன்றங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு செயல்படும் மன்றங்களின் நீதிபதிகளுக்கே அநீதி மறுக்கப்படும்போது, தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி, இதனை மிகவும் துணிவுடனும் சுயேச்சையாகவும் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதன் மூலம் எதிர்கொண்டிருக்கிறார். இவரது துணிவுக்கும், நேர்மைக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலை வணங்கி வணக்கம் செலுத்திக் கொள்கிறது. இவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் களைந்திட, நீதித்துறை மேலும் காலதாமதம் எதுவும் செய்யாது முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)