tamilnadu

பாலகிருஷ்ணா ரெட்டியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்


பாலகிருஷ்ணா ரெட்டியின் சிறை தண்டனையை உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 1998ம் ஆண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் முதல்கட்டமாக தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி சென்னையிலும் இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 


இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 


இந்த வழக்கு தொடா்பாக 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 போ் குற்றவாளிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த 16 நபா்களில் ஒருவராக பாலகிருஷ்ணா ரெட்டியும் இருந்தார். இந்த பாலகிருஷ்ணா ரெட்டி  தற்போதைய அ.தி.மு.க. அமைச்சரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

3 ஆண்டு சிறை 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கை விசாரித்தது. அதில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடைகோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டி கடந்த ஜனவரி 14ம் தேதி மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீடு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வினித் சரண் அறையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது. அப்போது விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யவும் விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரினார். கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான மனு மீது தமிழக அரசு 4 வாரங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் அதுவரை 3 ஆண்டு சிறை தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


;