tamilnadu

img

இந்நாள் மே 15 இதற்கு முன்னால்

1730 - இங்கிலாந்தின்(ஐக்கிய முடியரசின்) முதல் தலைமை அமைச்சர் (பிரதமர்)  என்ற நிலையை ராபர்ட் வால்ப்போல் பெற்றார் ! இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் பதவி முறைப்படியோ, ஒரு குறிப்பிட்ட நாளிலோ உருவாக்கப்படவேயில்லை. முடியரசாக இருந்தாலும், இங்கிலாந்து அரசரின் அதிகாரம், கட்டுப்பாடற்றதாக இல்லை. ஏனென்றால், கிறித்துவுக்கு முந்தைய காலத்திலேயே மக்களாட்சியைக் கொண்டிருந்து, சீசர் காலத்தில் முடியரசாக மாறினாலும், அரசர்கள் பரம்பரையாக இன்றி, தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக இருந்த ரோமப் பேரரசின் அங்கமாகத்தான் தற்போதைய இங்கிலாந்து இருந்தது. நான்காம் நூற்றாண்டுவாக்கில், ஆங்கில், சாக்சன்(ஆங்கிலோ-சாக்சன்) ஆகிய ஜெர்மானிக் இன மக்கள் குடியேறியதைத் தொடர்ந்தே ரோமப் பேரரசிலிருந்து பிரிந்தது.

(ஆங்கிலம் என்ற மொழியே இக்காலத்தில்தான் தோன்றியது!) இதனால், அவரவர் பகுதிகளில் பிரபுக்கள் சிற்றரசர்களாகவே இருந்ததுடன், இங்கிலாந்தின் அரசரின் அதிகாரமும் நாடாளுமன்றத்தின் முன்னோடியான இந்த பிரபுக்கள் அவையால் கட்டுப்படுத்தப்பட்டது. 1215இன் மேக்னா கார்ட்டா தொடங்கி, இந்த அதிகார மோதல்களால் அவ்வப்போது (அரசருக்கும், பிரபுக்கள் அவைக்குமிடையே!) உருவான ஒப்பந்தங்கள், பல்வேறு எழுதப்படாத மரபுகள் ஆகியவற்றாலேயே வழிநடத்தப்படும் இங்கிலாந்துக்கு, இன்றுவரை தொகுக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் இல்லை! வரிகளை வசூலிக்குமிடத்தில் பிரபுக்களே இருந்த நிலையில், நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை ஏற்க மறுத்தால், நிதி கிடைக்காது என்ற நிலை அரசருக்கு இருந்தது.

இதற்காகவே அரசரின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த இடமே ‘ட்ரஷரி பென்ச்’! கருவூலத்துக்குப் பொறுப்பாக இருந்த, ‘ஃபர்ஸ்ட் லார்ட் ஆஃப் த ட்ரஷரி’ பதவியை வகிக்கும் அமைச்சருக்கே அதிக அதிகாரங்கள் இருந்த நிலையில், 1720இல் ஏற்பட்டிருந்த தென்கடல் குமிழ் என்றழைக்கப்பட்ட நிதி  நெருக்கடியைச் சிறப்பாகக் கையாண்ட வால்ப்போல், 1721இல் இப்பதவியில் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற முடியாட்சி நடக்கும் ஒரு நாட்டில், ஒரு தலைமை அமைச்சரின் பொறுப்புகள், அதிகாரங்கள் என்னென்ன, அரசருக்குக் கட்டுப்பட்ட ஊழியரென்றாலும் எப்படிப் பணியாற்றவேண்டும் என்பனவற்றுக்கு முன்னுதாரணமாகச் செயல் பட்டுக்காட்டினார் வால்ப்போல். அவருக்கு இணையான அதிகாரங்களுடன் இருந்த மற்றொரு அமைச்சரான டவுன்ஷெண்ட் ஓய்வுபெற்ற 1730 மே 15இல் வால்ப்போல் தலைமை அமைச்சருக்கான முழு அதிகாரங்களையும் பெற்றதால், முறைப்படி தலைமை அமைச்சர் பதவி உருவாக்கப்படாவிட்டாலும், வால்ப்போல் முதல் தலைமை அமைச்சர் ஆன நாளாக இது குறிப்பிடப்படுகிறது.

அறிவுக்கடல்

;