tamilnadu

உயிர்கள் துச்சம்! துட்டு மிச்சம்!

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி எத்தியோப்பியா விமானம் ஒன்று பறக்கத்தொடங்கியவுடனே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த பயணிகளும் ஊழியர்களும் உயிரிழந்தனர். ஐந்து மாதங்களுக்கு முன் இந்தோனேசியா விமானம் ஒன்றும் இதேபோல் விபத்துக்குள்ளானது.இரண்டுமே போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 Max) எனும் வகைப்பட்டது. இந்த விபத்துகளுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விமானம் மேலெழும்பும் சக்தியை குறைக்கும் ஸ்டால்(stalling) எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் காரணமா என்ற கோணத்தில் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.  

விமானத்தின் இறக்கையின் மீது காற்று மோதும் கோணம் தவறாகப் போனால் விமானத்தின் முனை அதிகமாக மேலெழும்பும் அல்லது கீழிறங்கும்.இதை இரண்டு உணர்விகள் (sensors) கணினிக்கு தெரிவித்து சரி செய்யப்படுகிறது. இந்த மென்பொருள் எம்காஸ் (MCAS) எனப்படுகிறது. போயிங் 737 மேக்ஸ் மாடலில் உள்ள இந்த மென்பொருள், விமானம் ஆட்டோ பைலட் எனும் முறையில் இல்லாமல் மனித இயக்க செயல்பாட்டில் இருந்தாலும் விமானிகளின் கட்டளைகளை மீறி விமானத்தின் முனையை கீழிறக்கிவிடுகின்றன. இது தவறான சமிக்கைகளின் அடிப்படையில் என்பதைக் கண்ட விமானிகள் அதை சரி செய்ய முயன்றிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் மென்பொருள் மீண்டும் மீண்டும் விமானத்தை கீழிறக்கியுள்ளது.விபத்துக்குள்ளான தாய்லாந்து லயன் விமானத்தில் 2௦ முறை விமானிக்கும் மென்பொருளுக்கும் இந்த சண்டை நடந்துள்ளது.

இரண்டு உணர்விகளிலிருந்து வரும் தகவல்களை டிஸ்ப்ளே செய்யவும் அவற்றிலிருந்து வரும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தால் ஒரு எச்சரிக்கை விளக்கு எரியவும் மென்பொருள் பொருத்தும் வசதி உள்ளது.இதை மேம்படுத்தப்பட்டது (upgrade) என்கிறார்கள். ஆனால் விபத்துக்குள்ளான விமான மாதிரியில் இந்த இரண்டு பாகங்களும் பொருத்தப்படவில்லை.ஏனென்றால் தரப் பரிசோதனையில் அவை கட்டாயமல்ல. அவற்றின் விலை அதிகம். இதைப்போன்ற எக்ஸ்ட்ரா பாகங்களில் விமான நிறுவனங்கள் நிறைய லாபம் பார்க்கின்றன. குறைவான கட்டணம வசூலிக்கும் நிறுவனங்களும் அவை பொருத்தப்படாத மாதிரிகளையே வாங்குகின்றன. இந்த விசயங்களை போயிங் போன்ற விமானம் தயாரிக்கும் நிறுவனங்களும் பயணிகள் விமானங்களை நடத்தும் நிறுவனங்களும் மக்களிடமோ அரசு நிதி நெறியாளர்களிடமோ தெரிவிப்பதில்லை. இதைபோல் தீயணைப்பு கருவிகளிலும் ஒன்று வேலை செய்யாவிட்டால் பேக் அப் எனும் இன்னொன்று வைப்பதில்லை.ஒரு கருவியால் தீயை அணைக்கமுடியவில்லை என்றே அனுபவங்கள் காட்டுகின்றன. 

பிரான்ஸ் நாட்டின் ஏர் பஸ் நிறுவனத்துடனான வணிகப் போட்டியில் போயிங் நிறுவனம் குறுக்கு வழிகளைக் கையாண்டு புதிய மாடல்களை உற்பத்தி செய்கிறது; அதில் பொருத்தப்பட்டுள்ள மென்பொருள் குறித்து விமானிகளுக்கு முறையான தகவல்களும் பயிற்சிகளும் அளிக்கப்படுவதில்லை; அதற்கு தரச்சான்று தரும் பணி போயிங் நிறுவன ஊழியர்களிடமே விடப்பட்டது என்று பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.  

இப்பொழுது போயிங் நிறுவனம் எச்சரிக்கை விளக்கு எரிவதற்கும் இரண்டு உணர்விகளிலிருந்தும் தகவல்களை கணினி பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றார்போல மென்பொருளை மாற்றப் போவதாக சொல்கிறார்கள்.


கட்டுரைக்கு உதவிய ஆதாரங்கள் 

1.இந்து ஆங்கில நாளிதழ் 22/03/2019 Hiroko Tabuchi &David Gelles matrum 

2.பீப்பிள்ஸ் டெமாகிரசி மார்ச் 18-24, ரகு மற்றும் இணையதளங்களிலிருந்து...



;