tamilnadu

img

சாதனைகளுக்கு பதில் தேசப்பாதுகாப்பு குறித்து பேசும் மோடி அ.சவுந்தரராசன் சாடல்

 ஈரோடு, ஏப்.3-திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான அ.சவுந்தரராசன் அந்தியூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலுக்கு பின் இந்தியா ஜனநாயகத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் மோடி ஆட்சியில் அமர்ந்தார். மோடி ஆட்சி எல்லாத் துறைகளிலும் தோல்வி கண்டுள்ளது. அனைத்திலும் தோல்வி கண்ட ஆட்சி இதுவாகத்தான் இருக்க முடியும். வாக்குறுதிகளாக அறிவித்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியவில்லை. வர்த்தகம் மற்றும் பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்திலும் தோல்வி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை கண்டு பிடிப்பதாகவும், இந்தியாவை கருப்பு பணம் இல்லாத நாடாக ஆக மாற்றப்படும் என்றும் கூறினார். அதுமட்டும் இல்லாமல் கருப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொருவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். அப்படி ஒரு வேளை பணம் கொடுத்திருந்தால், இன்று வரை அப்பணத்தை எண்ணி கொண்டு தான் இருந்திருக்க வேண்டும்.கருப்பு பணத்தை பிடித்தாலும், எப்படி கணக்கில் வரும். அந்த பணமே கணக்கில் வராத பணம், அதை எப்படி கொடுக்க முடியும். கோடிக்கணக்கான ஏழைகள், சிறு தொழில் அதிபர்களை, விவசாயிகளை, சிறு வியாபாரிகளை அழித்துப் போட்டதுதான் இந்த பணமதிப்பு நடவடிக்கை. இந்நிலையில் பாஜகக்காரர்கள் கருப்பு பணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு கூறி உள்ளார். மேலும் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கும் கட்சியின் நிர்வாகிகள் மிகப்பெரிய கமிஷன் பெற்று உள்ளனர்.


சிறு, குறு தொழிலாளர்கள் என்றாலும் சரி, அதிக அளவில் லாபம் ஈட்டி வந்த தொழிலாளர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டமன்றத்திலே பட்ஜெட் உரையின் போது ஓபிஎஸ் அறிவித்தார். கோவையில் பல ஆயிரக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டு உள்ளது. 10 பேருக்கு வேலை கொடுத்து வந்தவர்கள் தற்போது கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதுதான் இன்றைய நிலை. ஆயத்த ஆடை தயாரிப்பு. சாயப்பட்டறை வைத்திருப்பவர்கள் வேறு மாநிலங்களில் செல்லும் அளவிற்கு மாறியுள்ளது. இந்த கொடிய திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசைத்தான் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 1998ஆம் ஆண்டு ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டு வைத்து, சில மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. பின் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தது மிகப்பெரிய தவறு என தெரிவித்தார். தற்போது அதிமுக கூட்டணி என்பது, தங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு தான்.தமிழகத்தில் நீட் தேர்வுகளை நடத்துகிறார்கள்.  14க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலங்களுக்கு சேர்ந்த மாணவர்கள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தினர். மத்திய மோடி அரசு ரேஷன் அரிசி கிலோ 8 ரூபாய்க்கு கொடுத்து அதை வாங்கி தமிழகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. தற்பொழுது உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு மத்திய அரசு 22 ரூபாய்க்குத்தான் ஒரு கிலோ அரிசி தரப்படும் என கூறுகிறார்கள். அரிசியின் அளவு குறைக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். இதன் மூலம் ரேஷன் கடைகளை குறைக்கும் ஏற்பாடு நடக்கிறது.


மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்யுமாறு கூறுகின்றனர். குறைந்த பட்சம் அடுத்த போகத்திற்காக கடன் கொடுங்கள் என்று கேட்கின்றனர். ஆனால் மோடி அரசு, வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது முடியாது என்றும், அப்படி தள்ளுபடி செய்தால் நாடு எப்படி முன்னேறும் என்று தத்துவம் பேசுகிறார். இதனால் மூன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் 400 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பணத்தை முழுமையாக கொடுக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதனைகள் குறித்து பேசுவதில்லை. மாறாக தேசப் பாதுகாப்பு என்று தொடர்ந்து பேசிவருகிறார். தேச பாதுகாப்பு இராணுவத்தின் பணி. அதை மோடி தனக்கு சாதகமாக்க முயற்சித்து வருகிறார். எனவே மோடியும், எடப்பாடி பழனிச்சாமி அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இந்த பிரச்சார கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் தலைமை தாங்கினார். சிபிஐ அந்தியூர் தொகுதி பொறுப்பாளர் வி.பி.குணசேகரன் முன்னிலை வகித்தார். திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குருசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் புகழேந்தி, சிவபாலன், மகாலிங்கம், பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் அ.ச.நாகராஜ், நிர்வாகிகள் ஜலாலுதீன், அழகேசன், மதிமுக மாவட்டத் துணைச்செயலாளர் கு.இராமன், இரகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். தவுட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில் மற்றும் ஜி.எச்.கார்னர் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று தலைவர்கைள் உரையை ஆர்வமுடன் கேட்டனர்.

;