tamilnadu

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வாக்குறுதி

ஈரோடு, ஏப்.15-ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் வறட்சியை சமாளிக்க நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களை செயல்படுத்தப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதியளித்துள்ளார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அ.கணேசமூர்த்தி மொடக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் முள்ளாம்பரப்பு, கிளியம்பட்டி, என்.பி.பாளையம், பூலப்பாளையம், பாளையம் செல்லப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, புதுப்பாளையம் பள்ளியூத்து, கள்ளிமேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், மொடக்குறிச்சி ஒன்றிய பகுதிகள் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். ஆனால் சில ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாததால், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. எனவே எதிர்கால நலன் கருதி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளை முழுமையாக தூர்வாரி மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் வகையில் நீர் செறிவூட்டும் திட்டம் கொண்டுவர முக்கியத்துவம் அளிக்கப்படும்.இதேபோல் விவசாயிகளின் விளை பொருட்களை சேமிக்க ஆங்காங்கே குளிர்பதன கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண புதியதாக கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதேபோல் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சாலை பணியாளர்கள் வேலை வாய்ப்பு, பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர் வேலை, கிராமப்புற பெண்களுக்கு சிறு தொழில் துவங்க வட்டியில்லா கடன், விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி, விவசாய தொழிலாளர்களின் நகை அடமான கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் இவ்வாறு அவர் பேசினார்.வாக்கு சேகரிப்பின் போது திமுகவின் ஒன்றிய செயலாளர் குணசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;