tamilnadu

img

இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு

கொழும்பு, ஏப்.22-ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் ஞாயிறன்று இப்பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடந்தன.இந்நிலையில், ஞாயிறு காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில், தலைநகர் கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்தகுண்டு வெடித்தது. அதே நேரத்தில், கொழும்புஅருகே கடலோர நகரமான நிகாம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.இந்த குண்டு வெடிப்புகளால், அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மக்கள் பலர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ்பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன. இந்த சொகுசு ஓட்டல்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் ஓட்டல்கள் ஆகும்.பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒருகுண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தநுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனிதவெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்கச் செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள்.ஆக, மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 215 பேர் பலியானதாக ஞாயிறன்றுஇலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 500- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் பலியானஇந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 


13 பேர் கைது


இந்நிலையில், இந்த குண்டு வெடிப்புதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. கொழும்புவில் உள்ள இரண்டுஇடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.


கொழும்பு விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு


இதனிடையே இலங்கையில் கல்விநிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கலவர தடுப்பு போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் உள்பட ஏராளமான போலீசார் விமான நிலையத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொழும்பு விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை கைப்பற்றிய விமானப்படை அதிகாரிகள் செயலிழக்க வைத்தனர்.


அமெரிக்கா எச்சரிக்கை


இந்நிலையில் இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. "பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் சாத்தியமான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டங்களை தொடர்ந்து செய்கின்றன. பயங்கரவாத தாக்குதல்கள் அறிவிக்கப்பட்டோ, எச்சரிக்கப்படாமலோ நடத்தப்படலாம், சுற்றுலா தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம்” என அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை செய்தியில், ஓட்டல்கள், கிளப்கள், உணவகங்கள், வழிபாட்டு இடங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதிகளின் இலக்காகலாம். அமெரிக்கர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈபிள் டவர்


இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்றானபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் அமைந்துள்ளஈபிள் டவரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இந்த துக்க நிகழ்வை அனுசரிக்கும்விதமாக அதன் அனைத்து விளக்குகளும் நிறுத்தப்பட்டு ஈபிள் டவர் இருளில் மூழ்கியது. முன்னதாக, 2017-ல் இங்கிலாந்திலும், 2015-ஆம் ஆண்டு பாரீஸில் 6 இடங்களில் நடந்தபயங்கரவாத தாக்குதலிலும் உயிரிழந்தவர்களுக்காக, ஈபிள் டவரில் இதேபோன்று துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




;