tamilnadu

img

தீக்கதிர் தென் மண்டலச் செய்திகள்

மூக்கையாத் தேவர் நினைவு தினம்: பொதுமக்களுக்கு தடை

மதுரை:
மறைந்த பி.கே.மூக்கையாத்தேவர் நினைவுதினம் கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டு அறிக்கை:-
பி.கே.மூக்கையாத்தேவர் நினைவு தினம் செப்.6-ஆம் தேதி மதுரையில் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவலையொட்டி 144 தடையுத்தரவு மதுரையில் அமலில் உள்ளது. எனவேஅஞ்சலி செலுத்த விரும்பும் பதிவு பெற்றஅரசியல் கட்சிகள் (ஐந்து பேருக்கு மிகாமல்) ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். பொது இடங்களில் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது. ஊர்வலமாக வரக்கூடாது. கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பால்குடத்திற்கு அனுமதியில்லை.

பழனி முருகன் கோவில் 200 பேருக்கே அனுமதி

பழனி:
பழனி முருகன் கோவிலில் கடந்த நான்கு நாட்களாக பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசனத்துக்கு வருவோர் ஆன் லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். 
கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.04545- 242683 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெயர், முகவரி, ஆதார் எண்ணை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி முதலில் அழைக்கும் 200 அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்களை அனுமதிக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வரவேண்டுமென கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல்  மலைக்கோவில் மேலே பஞ்சாமிர்தம், லட்டு, புளியோதரை மற்றும் முறுக்கு போன்ற பிரசாதங்கள் விற்பனைதொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை வளாகத்தில் சாப்பிட அனுமதியில்லை. கொண்டு செல்ல மட்டுமே  அனுமதி. பக்தா்கள் வெயிலில் நிற்காத வகையில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுண் நிதி நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:
கொரோனா காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் பெண்களிடம் அடாவடி வசூல்செய்வதைக் கண்டித்தும். இது தொடர்பாக புகாரளித்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இராஜபாளையம் திருவில்லிபுத்தூரில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இராஜபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க நகர் செயலாளர் மேரி, மாநிலச் செயலாளர் லட்சுமி,மனிதி அமைப்பின் செல்வி மாதர் சங்க மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவில்லிபுத்தூரில் சனிக்கிழமை மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மணல் கொள்ளை

திருவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்குளம் கிராமத்தில் உள்ள கடம்பன் குளம் கண்மாய் பகுதியில் ஜேசிபிஇயந்திரம், இரண்டு டிராக்டர்களுடன் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக சிவகாசி சார் ஆட்சியருக்கு தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அவர் அளித்த தகவலின்பேரில் திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் பால் துறை பிள்ளையார்குளம் வருவாய் ஆய்வாளர் தங்கமாரியப்பன் ஆகியோர் கண்மாயில் ஆய்வு நடத்தச் சென்றனர். அதிகாரிகளைப் பார்த்தவுடன் டிராக்டர்கள் மறைந்துவிட்டன. ஜேசிபி வாகனமும் அங்கிருந்து மாயமானது. ஜேசிபி இயந்திரத்தை ஐந்து கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்று பிடித்த அதிகாரிகள் அதை திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜேசிபி ஓட்டுநர் லட்சுமன பிரபு கைதுசெய்யப்பட்டார்.

பணி நிறைவு பாராட்டு விழா 
சின்னாளபட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த கே என் வீரன் சனிக்கிழமை பணி ஓய்வுபெற்றார். அவரை சிஐடியு  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வி.கே. முருகன் உள்ளிட்ட சிஐடி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
 

;