சென்னை, செப்.29- நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:- போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் என இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து முறை கேடுகள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த மத்தியஅரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதியில் தொடங்கி, சமீபத்திய ஆள்மாறாட்ட முறைகேடு வரை, நீட் தேர்வு நம் மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, நீட் தேர்வுக்கு தடை விதிக்க அ.தி.மு.க. அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.