(நடந்தாய் வாழி காவேரி... என்னும் சிலப்பதிகாரக் கானல் வரிச் சந்தம்…)
போதை, வன்முறை ஒழிந்திடவே,
புதுமை பூமி மலர்ந்திடவே,
மாதர் சங்கம் எழுச்சியொடு
நடந்தாய் வாழி, பெண்கனலே!
மாதர் விடுதலை எழுச்சியுற,
மகத்துவம் மிகுந்த நடைபயணம்
சாதனை செய்தே உயர்ந்திட்டாய்!
சுடரே! வாழி, பெண்கனலே!
கண்ணகி நடந்தாள் மதுரைக்கு,
கணவன் கோவலன் தன்னுடனே...
‘மண்மகள் அறிந்திலள்’ அவள் பாதம்,
மொழிந்தார் இளங்கோ சிலம்பினிலே…
மண்மகள் அறிந்திலள் அக்காலம்,
மண்ணும் அதிர்ந்தது இக்காலம்,
கண்ணும் துஞ்சாது நீநடந்தாய்…
கதிரே! வாழி, பெண்கனலே !...
மழையில் நனைந்தாய் நடுங்கவில்லை…
வெயிலில் காய்ந்தாய் வருந்தவில்லை...
பிழையறப் புதுயுகம் படைத்திடவே…
புரட்சி முழக்கம் அதிரச் செய்தாய்!
பிழையறப் புதுயுகம் படைத்திடவே...
பெண்மீது வன்முறை ஒழிந்திடவே…
நிலைத்திட நீதி, பொதுவுடைமை…
நடந்தாய் வாழி, பெண்கனலே!