tamilnadu

புதிய தேசிய கல்விக்கொள்கை பாதகமான அம்சங்களை நீக்காமல் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பதா?

மத்திய அரசின் அறிவிப்பு பயனற்றது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விமர்சனம்

சென்னை, ஆக. 28- தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக கல்வி யாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களையும் புறந்தள்ளிவிட்டு பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல் படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பது  வேடிக்கையானது என்றும்  மத்திய பாஜக அரசின் அறிவிப்பு பயனற்றது என்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.  இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியக் கல்விக்கொள்கை 2020ஐ நடை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலா ளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங் களின் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் 31.8.2020க்குள் இணையதளம் வாயிலாகக் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசியப் பிரச்சனை ஆகும். அத்தகு கல்விக் கொள்கை யை நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் மத்திய அமைச்சரவையின் ஒப்பு தலோடு நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான தாகும். ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது தெளி வாகப் புரிந்து கொண்டு, தாய்மொழியில் கருத்துக் களைத் தெரிவிப்பது போன்று பிற மொழிகளில் கருத்துக்களைத் தெரிவிக்க இயலாது என்பது தான் நடைமுறை உண்மை. கடந்த ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை யின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள பாதகமான அம்சங்கள், திருத்தப்பட வேண்டிய  விபரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்த அத்தனை கருத்துக் களையும் புறந்தள்ளி வரைவு அறிக்கையை அப்படியே மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல்  அளித்து, அதன் அடிப்படையில் தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பல்வேறு பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை தொடர் பாகக் கருத்துக் கூறுவதற்கு ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அதில் உள்ள பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என  ஆசிரியர்களிடம் கருத்து கேட்பதுதான் வேடிக்கை யாக உள்ளது.

அதிலும் கருத்துக் கேட்புப் படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி, பணியாற்றும் பள்ளி, பள்ளியின் U-DISE எண், மின்னஞ்சல் முகவரி. அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தை யும் கேட்பது என்பது ஆசிரியர்கள் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கும் செயலாகவும் உள்ளது. எனவே, இக்கருத்துக் கேட்பு ஒரு பயனையும் தராது என்பதே உண்மையாகும். எனவே, தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கும் எதிரான பல்வேறு கூறுகளைக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை - 2020ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்த ஆக்கப்பூர்வமான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய தேசியக் கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விரிவாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;