சென்னை:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட் 5 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 28 அன்று மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் காணொலிக்காட்சி வழியே நடைபெற்றது. கூட்டத்தில், 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 6500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் மற்றும் 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கழக மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு ள்ள 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தணிந்தவுடன் மாணவர்களின் நலன் கருதி சுழற்சிமுறையில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆகஸ்ட்5 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கு அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் பின்னேற்பு அனுமதி ஆணைஉடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் உடனடியாக வழங்கிட தமிழகஅரசு உத்தரவிட வேண்டும். பள்ளிகளில் சத்துணவுசாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதை விடுத்து சூடான, சுவையான, முட்டை உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்களைச் சமைத்து வழங்கிட வேண்டும்.
கொரோனா பேரிடர் காலத்திலும் தூத்துக்குடிமாவட்டக் கல்வித்துறை உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசாணை எண்: 280 நாள்: 24.06.2020 ன் படிஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தனியார்மருத்துவமனைகள் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்க மறுத்து வருவது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்றைய கொரோனா பொது முடக்கச் சூழலில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகைக்குறைவு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறைவு ஆகியவற்றின் காரணமாக ஐஎப்எச்ஆர்எம்எஸ் (IFHRMS) முறையில் ஊதியம் வழங்கும்நடைமுறைக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.