tamilnadu

img

தொழிலாளர்கள் பாதிப்பு

முதலமைச்சர் தலையிட சிஐடியு கோரிக்கை

சென்னை, ஏப்.19- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களது பிரச்சனைகளில் தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி  சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கினால் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் மூடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி பாதுகாத்திட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் அரசு உத்தரவை அமல்படுத்தாமல் உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தரணி சர்க்கரை ஆலை, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்கள், மேட்டூர் கெம்ப்ளாஸ்ட், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இயங்கி வரும் மெஜஸ்ட்டிக்.  எச்ஐஎல் நிறுவனங்களில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. இதுபோன்று நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காலத்திற்கான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இப்பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு சம்பளம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊழியர்களை அழைத்து வர அடையாள அட்டை வழங்கிடுக

கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவத்துறையோடு இணைந்து களப்பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் வசிப்பிடத்திலிருந்து பணி நிமித்தமாக செல்வதற்கு அவர்களது குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விடுகின்றனர். பணி முடித்து மீண்டும் வசிப்பிடத்திற்கு வருவதற்கு அவர்களது குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது காவல்துறையினரால் தடுக்கப்படுகின்றனர். இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், எனவே தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு அங்கன்வாடி ஊழியர்களை அழைத்து வரும் குடும்பத்தினருக்கு அனுமதி அட்டை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு முககவசம், கையுறை, கிருமிநாசினி போன்றவைகள் வழங்க வேண்டும்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்திலிருந்து வாராணசி சென்ற 127 பேர் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். தற்போது அவர்கள் தனி பேருந்துகள் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.ஏப்ரல் 20 ஆம் தேதி சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாகன ஏற்பாடு செய்து அந்தந்த மாநில எல்லையில் விடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்க

மத்திய அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் மக்களின் காய்கறி மற்றும் உணவு தானியங்கள் , பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர், பால் உட்பட அத்தியவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே ஊடரங்கினால் வேலையில்லாமல் ஊதியமில்லாமல்  பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும்.எனவே முதல்வர்  ஊரடங்கு நீடிக்கும் வரை   சுங்க கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;