tamilnadu

img

‘விவசாயத் தொழிலாளர்களை பட்டினி போடும் அதிமுக அரசு’

புதுக்கோட்டை, ஆக.6- வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயத் தொழி லாளர்கள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  முற்றுகை யிட்டு செவ்வாய்க்கிழமையன்று போராட்ட த்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர் பேசினார். அவர் பேசும்போது, வேலை வழங்காமல் திட்டத்தை சிதைப்பதையும், விவசாயத் தொழிலாளர்களைப் பட்டினி போடுவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது கஜா  புயலால் பாதிக்கப்பட்ட பகுதி. இந்தப் பகுதிக்கு  150 நாட்கள் வேலை வழங்குவதாக அரசு அறி வித்துள்ளது. மேலும், வறட்சியால் பாதிக்கப் பட்ட 24 மாவட்டங்களில் 150 நாள் வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  சமீபத்தில் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் பகுதியில் 100 நாட்கள் கூட  வேலை வழங்கப்படவில்லை. மத்திய, மாநில  அரசுகள் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதாக  அறிவித்து மூன்று மாதங்களை கடந்த பின்பும்  பணம் இன்றும் ஊராட்சி ஒன்றிய அலுவல கங்களுக்கு வரவில்லை என அதிகாரிகள் புலம்பு கின்றனர். மொத்தத்தில் மக்களுக்கு வேலையும்  கிடைக்கவில்லை. கூலியும் கிடைக்கவில்லை.

ஆனால், மோடி அரசும், எடப்பாடி அரசும் ஏழைகளுக்காகத்தான் எங்கள் அரசு என வாய்ச்சவடால் பேசி வருகின்றனர். மத்திய  அமைச்சர்கள் நூறுநாள் வேலைச் சட்டத்தை  சிறுகச்சிறுக செயல்படவிடாமல் முடக்குவோம் என்கிறார்கள். மோடி அரசு காஷ்மீரத்தில் 70 ஆண்டுகள் அமலில் இருந்த அந்த மக்களு க்கான சிறப்புச் சட்டம் 370-ஐ ரத்துசெய்துள்ளது. சட்டங்கள் இவர்கள் கையிலே சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கிறது என்றார்.  போராட்டத்திற்கு தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.சக்திவேல், வடக்கு ஒன்றியத் தலைவர் எம்.இளவரசு ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை தொடங்கி வைத்து கறம்பக்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் எம்.உடையப்பன் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், விதொச மாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் த.அன்பழகன், எம்.பாலசுந்தரமூர்த்தி, விதொச மாவட்ட துணைத் தலைவர் எம்.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் வி.மணிவேல், ஒன்றியத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலதேவன், அமுதவள்ளி ஆகியோரிடம் விவசாயத் தொழிலாளர்கள் தலைவர்கள் முன்னிலையில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அதி காரிகள் அடுத்த 15 தினங்களுக்குள் அனைத்துத் தொழிலாளர்களுக்கும்  வேலை வழங்குவதாக உறுதியளித்தனர். 

;