தமிழகத்தை ஆளும் அதிமுக அரசின் ‘இறுதி’ பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் வரு வதையொட்டி அதிமுக அரசின் கடைசி முழுநீள பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்துள்ளது. இதில் கல்விக்கான ஒதுக்கீடாக பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.34,841 கோடியும், உயர்கல்வித் துறைக்கு 5,052 கோடியும் அறிவித்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும் போது இது கூடுதல் தொகையாக இருப்பினும், மாண வர்களின் எதிர்பார்ப்பான 30 விழுக்காட்டில் 20 விழுக்காட்டைக்கூட தாண்டவில்லை என்பதே நிதர்சன மான உண்மையாகும்.
இரண்டு கோடி மக்கள் தொகைகொண்ட தில்லி மாநிலத்தில் மொத்த பட்ஜெட்டில் 26 விழுக்காட்டை கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் பொழுது ஏன் தமிழக அரசால் ஒதுக்க இயலாது?
அறிவிக்கப்படும் பட்ஜெட் தொகையும் பள்ளிக ளின் தரத்தை மேம்படுத்தி மாணவர்களை ஈர்க்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் வகையில் இருக்க வேண்டும். ஆசிரியர், ஆசிரியரல்லா பணியாளர்களின் பற்றாக்குறை, விடுதி வசதிகள், நவீன ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். புதிய திட்டமிடலை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்ட கலந்துரையா டலை நடத்திட அரசு முயற்சிக்க வேண்டும். அரசுப் பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது, இடைநிற்றல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்திட 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு போன்ற அச்ச மூட்டும் அறிவிப்புகளை முற்றாக கைவிட வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதி மாணவர்களின் நலனை மேம் படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றால் நீட் தேர்வு போன்ற அநீதியை தமிழக அரசு தவிர்க்க மத்திய அரசுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படித்தால் எந்த வொரு உயர்கல்விக்கும் சென்று சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். புதிதாக திறக்கப் பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை விட மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்திட தமிழக அரசு கவலையோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மத்தியரசின் பட்ஜெட் வழியில் இதுவும் வெற்று பட்ஜெட்டாக தேர்தலுக்கான பட்ஜெட்டாக மாறிவிடும்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...