மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவால் தொழில் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளர்களின் குடும்பங்கள் கண்ணீர் கடலில் தத்தளித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிறது. இயல்புநிலை எப்போது திரும்பும் என்பது கேள்விக்குறியாய் நிற்கிறது?\
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் பீடித் தொழிலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றன.
தொழிற்சங்கங்களின் பல்வேறு கட்ட போராட்டங் களுக்குப் பிறகு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பீடித் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 60 சதவீதம் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். மேலும் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டு வருகிறது. மருத்துவமனை, தொழிலாளர் நல அலுவலகங்களும் உள்ளன. குடிசை தொழில் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட பீடித் தொழிலாளர்கள் அடையாள அட்டை வைத்திருந்தும் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டும் நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் 50 க்கும் மேற்பட்ட டிரேட்மார்க் பீடி கம்பெனிகள் இருந்தாலும் உள்ளூரில் பீடி உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.இவர்களை நம்பி ஒரு லட்சம் குடும்பங்களைச் சார்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் களும் பீடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 850 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் குடிசைத்தொழில் பீடி தொழில். கடந்த காலங்களில் படிக்காதவர்கள் ஆதரவற்ற பெண்களை சார்ந்துள்ள குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை ஓரளவு பூர்த்தி செய்யும் தொழிலாக இது விளங்கி வந்தது ஆனால் இன்று பல்வேறு காரணங்களால் நசிந்துள்ளது. இந்த பிடித் தொழிலில் ஒரு குடும்பமே சேர்ந்து பாடுபட வேண்டும் குடும்ப உறுப்பினர்கள் உழைத்தால்தான் ஆயிரம் பேருக்கு ரூ.300க்கும் குறைவான கூலி தற்போது கிடைக்கிறது. அதிலும் இலை இழப்பு புகையிலை இழப்பு என பல்வேறு காரணங்களால் பணத்தை பிடித்தம் செய்து கொள்வதால் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலை மாறி விட்டதாகவும் தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலைவர்க ளும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில், பீடித் தொழிலாளர்களிடம் சேமநல அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை பெற்று மாநில அரசின் நிவாரண உதவித்தொகை சமர்ப்பிக்க தொழிலாளர் நல ஆணையரகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் அரசின் பிஎஃப் திட்டத்தில் இணையாத சேமநல அட்டை இல்லாத பீடித் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்து வரும் பீடி தொழிலாளர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரண தொகை வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீடித் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்க தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பீடித் தொழிலாளர்களில் சுமார் 50 விழுக்காட்டினர் பிஎஃப் திட்டத்தில் இணைந்து உள்ளனர் இந்நிலையில் தொழிலாளர் நல ஆணையர் சார்பில் சேமநல அட்டை ஆதார் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை பீடித் தொழிலாளர் மருத்துவமனைகள் மூலம் கேட்கப்பட்டுள்ளது. இதில் அடையாள அட்டை பெறாதவர்கள் நிலையையும் கருத்தில் கொள்வதுடன் நிவாரண உதவியை விரைந்து வழங்க வேண்டும் என்றும் சேமநல நிதியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றும் எம்.பி. ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.