கோவை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மூத்த தோழர்களில் ஒருவரும், தீக்கதிர் நாளிதழின் முன்னாள் ஊழியருமான தோழர் கருப்புசாமி புதனன்று இரவு கோவை பீளமேடு புதூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87.கோவையின் பிரபல பத்திரிகையான நவஇந்தியாவில் அச்சக ஊழியராக பணியாற்றியவர் கருப்புசாமி. 1974 ஆம் ஆண்டு தீக்கதிர் மதுரை அச்சகத்திற்காககேரள தேசாபிமானி பத்திரிகையிலிருந்து அச்சு இயந்திரம் பெறப்பட்டது. இந்த இயந்திரத்தை இயக்குவதற்காக மறைந்த மூத்த தலைவர் கே.ரமணியின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு சென்றார். இதைத்தொடர்ந்து தீக்கதிரிலேயே தங்கி சுமார் 15 ஆண்டு காலம் அச்சக மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதன்பின் கடந்த 2013 ஆம் ஆண்டு தீக்கதிரின் பொன்விழா ஆண்டையொட்டி கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பிரகாஷ் காரத் அவர்களால் மறைந்த தோழர் கருப்புசாமி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தோழரின் மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், எம்.கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், நகரக்குழு உறுப்பினர்கள் ஏ.மேகநாதன், கனகராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும்,அவரோடு உடன் பணியாற்றிய தீக்கதிர் மதுரை மற்றும் சென்னை பதிப்பு தோழர்கள் இரங்கல் தெரிவித்தனர்.