tamilnadu

img

தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள் : வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார்.

இதன்படி, தமிழக மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 ஆகும். மொத்தமுள்ள வாக்காளர்களில் 3 கோடியே 01 லட்சத்து 12 ஆயிரத்து 370 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 09 லட்சத்து 25 ஆயிரத்து 603 பெண் வாக்காளர்களும், 6,385 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் உள்ளது. இங்கு 1.73 லட்சத்து வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். 

வாக்காளர் பட்டியல் தொடர்பாக நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஜனவரி 5ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.