tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் - பிர்சா முண்டா நினைவு நாள்

பிர்சா முண்டா ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர். தற்போதைய பீகார், ஜார்க்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு  19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் வாழ்ந்த 25 ஆண்டுகளில் அவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள். இவர் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று அறைகூவல் விடுத்துப் போராடினார்.

இவர் 1875ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி இராஞ்சி மாவட்டத்தில் உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் சுகன் முண்டா. ஆங்கிலேயர்களின் ஆட்சி இவருக்குப் பிடிக்கவில்லை அவர்கள் இந்திய மக்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று வாதிட்டார். மக்களைச் சித்ரவதை செய்து அவர்களின் சொத்துக்களைச் சுரண்டிச் செல்கிறார்கள் என்று கூறினார். ஆங்கிலேய அரசின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவந்து இந்தியாவை இந்திய மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். 

ஜமீன்தார்கள் ,பழங்குடிகளின் நிலத்தை வட்டிக்குக் கடன் கொடுக்கிறேன் என்ற போர்வையில் பிடுங்கி வைத்திருந்தார்கள். அடிமையாகவும், கூலிகளாகவும் வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

 அந்த காலகட்டமான 1890ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போதுதான் சோட்டா நாக்பூர் பகுதிகளில் மக்களை ஒன்று சேர்த்தார். 1894 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித்தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு போராடினார். இதுவே பழங்குடிகளுக்காக இந்தியாவிலேயே நடந்த முதல் போராட்டம். 1900ஆம் ஆண்டு கெரில்லா வீரர்களின் உதவிகொண்டு போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது. அதே ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் நாள் தனது 25ஆவது வயதிலேயே சிறையிலேயே மரணமடைந்தார்.

இவரது வாழ்க்கை வரலாற்றை மகாஸ்வேதாதேவி ‘காட்டில் உரிமை’ எனும் நாவலில் பழங்குடியின மக்களின் போராட்ட வரலாறாகக் காட்சிப்படுத்தியிருப்பதும் இந்நூல் சாகித்ய அகாதமி விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பெரணமல்லூர் சேகரன்

;