tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 20 இதற்கு முன்னால்

1720 - இங்கிலாந்துக் கடற்படையிடம், கரீபியக் கடற்கொள்ளைக்காரர் காலிக்கோ ஜேக், ஜமைக்காவிலுள்ள டிஸ்கவரி  துறைமுக (அல்லது உலர் துறைமுக) குடாவில், சிறிய யுத்தத்திற்குப்பின் பிடிபட்டார். தன் கப்பலுக்கென்று தனிக்கொடி வைத்திருந்த இவர்தான், தற்போது கடற்கொள்ளையர்களை அடையாளப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் மண்டையோட்டு கருப்புக்கொடியை முதலில் பயன்படுத்தியவர். இவருக்கு முந்தைய கடற்கொள்ளையர்களின் கொடிகளில் முழு எலும்புக்கூடே இடம்பெற்றிருந்த நிலையில், மண்டையோடும், எக்ஸ் வடிவத்தில் இரண்டு வாள்களும் கொண்ட கொடியை இவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்.

பின்னாளில், அந்த வாள்களுக்குப் பதிலாக, எலும்புகள் இடம்பெற்ற இந்தக் கொடியின் பெயர் ஜாலி ரோஜர்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பெயரைக் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தினர் என்பதைத் தவிர, வேறு பெயர்க்காரணம் தெரியவில்லை. ஜேக் என்ற செல்லப்பெயர் கொண்ட காலிக்கோ ஜேக்கின் இயற்பெயர் ஜான் ரக்கம். இவர் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் காலிக்கோ துணியாலான உடைகளையே அணிந்ததால், காலிக்கோ ஜேக் என்பதே பெயராகிவிட்டது. காலிக்கோ என்பது, கேரளத்தில் உருவான துணி வகையாகும். காலிக்கட் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட கோழிக்கோட்டிலிருந்து வந்ததால், 1505இல், ஆங்கிலேயர்கள் இத்துணிக்கு காலிக்கோ என்று பெயரிட்டனர். கடற்கொள்ளையர்களின் நாடு என்றழைக்கப்பட்ட, நியூ ப்ராவிடன்ஸ் தீவிலிருந்து(பகாமாஸ் தீவுகளைச் சேர்ந்தது) இயங்கிய சார்லஸ் வேன் என்ற கடற்கொள்ளைக்காரரின் கப்பலில் ஜேக் பணிபுரிந்தார்.

ஒருமுறை நியூயார்க் அருகில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெரிய பிரெஞ்ச்சுப் போர்க்கப்பலிடம் பிடிபடும் நிலையேற்பட்டது. சரணடைவது என்று வேன் முடிவெடுத்தபோது, போரிடலாம் என்று முடிவெடுத்த ஜேக் வெற்றியும் பெற, கப்பலிலிருந்த பிற கொள்ளையர்கள் இவரைத் தளபதியாக்கியதுடன், வெல்லப்பட்ட பெரிய போர்க்கப்பலும் ஜேக்குக் கிடைத்தது. 1650களிலிருந்து 1730கள் வரையான காலம் கடற்கொள்ளையின் பொற்காலம் என்று குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்த கடல் வணிகம், போர்களுக்குப்பின் குறைந்த ஐரோப்பிய கடற்படைகள், கடற்படையில் அனுபவம்பெற்று, போர்களுக்குப்பின் வேலையிழந்த மாலுமிகள் உள்ளிட்டவை இக்காலத்தில் கடற்கொள்ளையின் வளர்ச்சிக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இக்காலத்தில், குடியேற்றவாத நாடுகளின் கடற்படைகளுக்கும், கடற்கொள்ளையர்களுக்குமிடையே, குறிப்பிடத்தக்க பல போர்களும் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையின் பொற்காலத்தின் இறுதிப்பகுதியில் கோலோச்சியவர்களில் ஒருவரான ஜேக், பிடிபட்டபின் மரணதண்டனை விதிக்கப்பட்டு, 1720 நவம்பர் 18இல் 37 வயதில் கொல்லப்பட்டார்.

;